டி20 கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு வருவதும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர, ஐசிசி-யும் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் பல விதமான சீரிய முயற்சிகளை எடுத்துவருகின்றன.

2019ல் முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை நடத்தப்படுவதை போல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் இந்த ஆண்டு முதல் ஆரம்பித்துள்ளது ஐசிசி. இந்த ஆண்டு நடந்த ஆஷஸ் முதல் 2021 வரை அனைத்து அணிகளும் ஆடும் டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரியது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021ல் லண்டன் லார்ட்ஸில் நடக்கும் இறுதி போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகள் காலங்காலமாக 5 நாட்கள் நடத்தப்பட்டுவருகின்றன. முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகளே மிகவும் பரபரப்பாக இருக்கும். கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி செசன் வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்த போட்டிகளெல்லாம் உண்டு.

ஆனால் தற்போது, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய சில அணிகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலுவான அணிகளாக திகழ்ந்து ஆதிக்கம் செலுத்துவதால், அந்த அணிகள் மற்ற எளிய அணிகளை எளிதாக வீழ்த்திவிடுகின்றன. அதனால் பல போட்டிகள் 4 நாட்களுக்குள்ளாகவே முடிந்துவிடுகின்றன. 

இந்நிலையில்,  2023 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில், ஐசிசி நடத்தும் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. இப்படி  4 நாட்களாக குறைத்து நடத்தும் பட்சத்தில், அந்த 8 ஆண்டுகளில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் 335 நாட்கள் மீதமாகும் என்பது ஐசிசியின் கருத்து. ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியப்படும், கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவளிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

4 நாள் டெஸ்ட் நடத்துவது உறுதி கிடையாது. இப்போதுதான் அதுகுறித்த விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் அப்படியொரு விவாதம் தொடங்கியதுமே முன்னாள் வீரர்கள் முதல் இந்நாள் வீரர்கள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, எந்தவித திடமான திட்டமும் அதுகுறித்த அறிவிப்பும் இல்லாதநிலையில், இப்போதே அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. அதுகுறித்த ப்ரபோசல் வரட்டும்.. பார்க்கலாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார். 

4 நாட்களாக டெஸ்ட் போட்டியை குறைக்கக்கூடாது. ஐந்தாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பல போட்டிகள் பரபரப்பாக முடிந்து த்ரில் முடிவை பெற்றுள்ளன என்பதால், டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் நடத்தப்பட வேண்டும். 4 நாட்களாக முட்டாள்தனமானது. இதுகுறித்து ஐசிசி பரிசீலிக்காது என்று நம்புவதாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின் பவுலர் நேதன் லயன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே பிங்க் டெஸ்ட் நாளை சிட்னியில் தொடங்கவுள்ள நிலையில், 4 நாட்களாக டெஸ்ட் போட்டியை குறைப்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் மெக்ராத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கிளென் மெக்ராத், 5 நாட்கள் டெஸ்ட் போட்டி நடப்பதுதான் ஸ்பெஷல்.  அதை குறைப்பதில் எனக்கு ஈடுபாடும் இல்லை. அதை நான் வெறுக்கிறேன். பிங்க் டெஸ்ட், பகலிரவு டெஸ்ட் ஆகிய முன்னெடுப்புகள், டெஸ்ட் கிரிக்கெட்டை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கவும், அடுத்தகட்டத்திற்கு நகர்த்தவும் உதவும். நான் பாரம்பரியத்தை விரும்புபவன். எனவே டெஸ்ட் போட்டி இப்போது எப்படி 5 நாட்கள் நடத்தப்படுகிறதோ, அதே முறையே தொடர்வதையே நான் விரும்புகிறேன் என்று தனது கருத்தை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவித்தார் க்ளென் மெக்ராத்.