ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது சீசன் கொரோனாவுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐபிஎல்லுக்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக தயாராகிவருகின்றனர். 

ஐபிஎல் கோப்பையை வென்றிராத மூன்று அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் தான் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகள். இந்த 3 அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிய மேக்ஸ்வெல், அதன்பின்னர் டெல்லி அணியில் ஆடினார். இந்த சீசனில் ரூ.10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. 

இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கேஎல் ராகுலின் தலைமையில் களம் காணவுள்ளது. இளம் துடிப்பான மற்றும் சிறந்த டெக்னிக்கை கொண்ட நல்ல பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல், ஐபிஎல்லில் முதல்முறையாக கேப்டனாக செயல்படவுள்ளார். இந்திய அணியின் முன்னாள் மேட்ச் வின்னரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். எனவே பஞ்சாப் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

எனவே இந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை வெல்லும் நேரம் வந்துவிட்டது என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். கிரிக்பஸ் இணையதளத்தில் ஹர்ஷா போக்ளேவுடன் பேசிய மேக்ஸ்வெல், முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெல்வதற்கான நேரம் வந்துவிட்டது. கோப்பைக்கு அருகில் வந்துவிட்டோம். கடந்த ஆறு ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடுமையாக உழைத்துவருகிறது. எனவே இந்த முறை கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.