ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அப்படியான ஒரு ஐசிசி தொடர் இல்லாமல் இருந்தது. 

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடந்துவரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டி. 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி. 

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போலவே டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஜெர்சியிலும் வீரர்களின் பெயரும் நம்பரும் போட்டுக்கொள்ளலாம் என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெயர் மற்றும் நம்பர் பொறித்த ஜெர்சிதான் அணிந்து ஆடிவருகின்றனர். 

இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் பிரெட் லீ ஆகிய இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டுவீட் செய்த கில்கிறிஸ்ட், பழைய முறையையே ஆதரிப்பதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் ஜெர்சியில் நம்பர் மற்றும் பெயர் இடம்பெற்றிருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கில்கிறிஸ்ட் முதலில் பதிவிட்டார். 

நமது திடமான கருத்தை தெரிவிப்பதற்கு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. அடுத்த 3 நிமிடத்தில் அடுத்த டுவீட்டை தட்டினார் கில்கிறிஸ்ட். அதில் தனது எதிர்ப்பை திட்டவட்டமாகவும் உறுதியாகவும் பதிவு செய்தார். அந்த பதிவில், நான் எனது மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். டெஸ்ட் ஜெர்சியில் வீரர்களின் பெயரும் நம்பரும் இடம்பெற்றிருப்பது குப்பை மாதிரி உள்ளது என்று மிகக்கடுமையாக விமர்சித்தார். 

கில்கிறிஸ்ட்டின் எதிர்ப்பை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலரும் கில்கிறிஸ்ட்டின் சக வீரருமான பிரெட் லீயும் டெஸ்ட் ஜெர்சியில் வீரர்களின் பெயர் மற்றும் நம்பர் இடம்பெற்றிருப்பதை ரசிக்கவில்லை. அதுகுறித்த தனது எதிர்ப்பை லீயும் பதிவு செய்துள்ளார்.