உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதன் விளைவாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான மயன்க் அகர்வால், ஒரே ஆண்டில் டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார். டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். 

டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஓராண்டுக்குள்ளாக இரண்டு இரட்டை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டி என்பதற்காக மிகவும் மந்தமாக ஆடாமல் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசுகிறார். அவரது ஸ்டிரைக் ரேட் நன்றாகவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 8 சிக்ஸர்களை விளாசினார். 

மிகவும் தெளிவாக, நிதானமாக, அபாரமான ஷாட்டுகளை ஆடி ஸ்கோர் செய்கிறார். புல் ஷாட், ஃப்ளிக் ஷாட், கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ், ஸ்வீப் ஷாட், அப்பர் கட் என அனைத்துவிதமான ஷாட்டுகளையுமே நேர்த்தியாக ஆடுகிறார். எனவே அவரது விக்கெட்டை வீழ்த்துவது எதிரணிகளுக்கு கடும் சவாலாக உள்ளது. 

ஆனாலும் மயன்க் அகர்வால் போகப்போக மிகவும் கவனமாக ஆட வேண்டும் என்று கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விவாதத்தில் பேசிய கவாஸ்கர், மயன்க் அகர்வாலை வெகுவாக புகழ்ந்ததோடு, அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

மயன்க் அகர்வால் குறித்து பேசிய கவாஸ்கர், மயன்க் அகர்வால் இப்போதைக்கு வெகு சிறப்பாக ஆடிவருகிறார். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதேபோல அவர் சிறப்பாக ஆடவேண்டும். ஆனால் போகப்போக அகர்வாலின் பேட்டிங்கை ஆராய்ந்து எதிரணிகள், அவருக்கு எதிராக தீவிரமான திட்டங்களுடன் கடும் சவாலளிப்பார்கள். ஆனால் அதையும் சமாளித்து அவர் சிறப்பாக ஆடி இப்போதைப்போலவே ஸ்கோர் செய்ய வேண்டும். 

மயன்க் அகர்வால் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. அவர் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடினாலும் சரி, பேக் ஃபூட்டில் ஆடினாலும் சரி, அவரது பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. ஆஃப் திசையில் சாயாமல் நிலையாக நின்று ஆடுகிறார். அந்தவகையில் அவர் மிகுந்த தன்னம்பிக்கை மிக்கவராகத்தான் இருக்கிறார். ஆனாலும் இனிவரும் காலங்களில் மிகவும் கவனமாக ஆடவேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.