இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் அபாரமாக ஆடி, லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதி போட்டி வரை முன்னேறியது. முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்து உலக கோப்பையை இழந்தது. 

இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும், சிறப்பாக ஆடி இறுதி போட்டி வரை முன்னேறியதற்கு முன்னாள் மற்றும் இந்நாள் ஜாம்பவான் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். 

ஷஃபாலி வெர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ் ஆகியோர் உலக கோப்பையில் சிறப்பாக ஆடினர். இந்திய அணி தோற்றிருந்தாலும், இந்த அணி கண்டிப்பாக எதிர்காலத்தில் கோப்பையை வெல்லும் என விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் கங்குலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும், அணியை வலுப்படுத்துவதற்கும் கவாஸ்கர், ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும்தான், இந்திய மகளிர் அணி இந்தளவிற்கு மேம்பட்டிருக்கிறது. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பே முத்தரப்பு தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆட ஏற்பாடு செய்தது பிசிசிஐ. அதன் விளைவாக, இந்திய அணி ஒரு மாதத்திற்கு முன்பே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. அதனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மை, கண்டிஷன் ஆகியவற்றை நன்கு புரிந்துகொண்டு சிறப்பாக வீராங்கனைகளால் ஆட முடிந்தது. 

பிசிசிஐக்கும் கங்குலிக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மகளிர் ஐபிஎல் நடத்துவதன் மூலம் நிறைய திறமைசாலிகளை கண்டறிய முடியும். ஆஸ்திரேலியாவில் மகளிர் பிபிஎல் நடத்தப்படுகிறது. ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் மகளிர் பிபிஎல்லில் ஆடுகின்றனர். எனவே இங்கும் அதுமாதிரி மகளிர் ஐபிஎல் நடத்த வேண்டும் என்று கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.