இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், இந்தியா ஏ அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ஆடிவருகிறது. அதேவேளையில் இந்தியாவில் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் நடந்துவருகிறது. 

ரஞ்சி தொடர் நடந்துவரும் நிலையில், முக்கியமான வீரர்கள் இந்தியா ஏ அணிக்கு ஆடுவதற்காக சென்றுவிட்டதால், நிறைய அணிகள் முழு பலத்துடன் இல்லாமல் பலமிழந்து திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் ரஞ்சி போட்டிகளும் சுவாரஸ்யமில்லாமல் இருக்கின்றன. 

இந்நிலையில், இதுகுறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்தியாவில் ரஞ்சி போட்டி நடந்துவரும் அதே சமயத்தில் அண்டர் 19 உலக கோப்பையும் நடந்துகொண்டிருக்கிறது. எனவே இளம் வீரர்கள் அண்டர் 19 உலக கோப்பையில் ஆட சென்றுவிட்டார்கள். அப்படியிருக்கையில், ரஞ்சி தொடர் நடந்துவரும் அதேவேளையில், இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சென்றிருக்கிறது. அதனால் பல ரஞ்சி அணிகள் பலத்தை இழந்திருக்கின்றன.

Also Read - ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய கோலி.. அரிதினும் அரிதான சம்பவத்தின் வீடியோ

தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் நாக் அவுட் சுற்றுகளுக்கு மாநில அணிகள் முன்னேறுவதற்கு, அந்த அணிகளின் முக்கியமான வீரர்களின் உதவி தேவை. ஆனால் வீரர்கள் இந்தியா ஏ அணியில் ஆட சென்றுவிட்டதால், பல அணிகள் வலிமையிழந்துள்ளன. மற்ற நாடுகளின் ஏ அணிகள், உள்நாட்டு போட்டிகள் இல்லாத காலத்தில்தான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும். ஆனால் இந்தியாவில் தான் ரஞ்சி தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே, இந்தியா ஏ அணி வெளிநாட்டிற்கு செல்கிறது. ஆனால் ஐபிஎல் சமயத்தில் மட்டும் அந்த 2 மாதங்களில் இந்தியா ஏ அணி எந்த நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செல்வதில்லையே.. அது எப்படி..? என்று கேள்வியெழுப்பியதோடு, இந்தியா ஏ அணியின் பயணத்திட்டத்தை கடுமையாக சாடியுள்ளார் கவாஸ்கர்.