கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதுடன், தங்களுக்குள்ளாகவும் உரையாடுகின்றனர்.

அந்தவகையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜாவின் யூடியூப் சேனலுக்கு பேசிய சுனில் கவாஸ்கர், சேவாக் தான் கடந்த 20 ஆண்டுகளில் ரசிகர்களை அதிகம் எண்டர்டெய்ன் செய்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், சேவாக் பேட்டிங் செய்யும் போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் செய்து பார்ப்போம். அவர் டெஸ்ட் போட்டியில் விரைவில் ஆட்டமிழந்துவிட்டால், அவரது பேட்டிங்கை ஒரு நாள் முழுதும் பார்க்க முடியாமல் போனதற்காக, அவர் மீது கோபம் வந்துவிடும். 

சேவாக் தவறான ஷாட்டை ஆடி விரைவில் ஆட்டமிழந்தால், அன்றைய தினத்திற்கான எண்டர்டெய்ன்மெண்ட்டை இழந்துவிட்ட விரக்தி ஏற்படும். சேவாக் வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்துவிடாமல், ஒருநாள் முழுவதும் ஆட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருக்கும். எனக்கு சேவாக்கின் பேட்டிங்கை பார்க்க ரொம்ப பிடிக்கும். சரியாக சொல்ல வேண்டுமானால், கடந்த 20 ஆண்டுகளில் ரசிகர்களை அதிகம் எண்டர்டெய்ன் செய்த பேட்ஸ்மேன் சேவாக் தான் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே நிதானமாக ஆட வேண்டும் என்ற பாரம்பரிய கருத்தை உடைத்து, தொடக்கம் முதலே அடித்து ஆடி டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓபனிங் முறையையே மாற்றியமைத்தவர் சேவாக் தான். கிரிக்கெட்டில் பேட்டிங் டெக்னிக் பற்றியெல்லாம் பெரிதாக பேசப்படும் நிலையில், பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்ற எளிய மனநிலையுடனும் பேட்டிங் உத்தியுடனும் ஆடி ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வதுடன், இந்திய அணிக்கும் வெற்றிகளை தேடிக்கொடுத்தவர் சேவாக்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முச்சதம் அடித்த இந்திய வீரர் சேவாக் தான். 2004ல் பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடந்த டெஸ்ட்டில் முதல் முச்சதத்தை அடித்த சேவாக், 2008ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது முச்சதம் அடித்தார். அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரட்டை சதமடித்து அசத்தினார். இன்னிங்ஸின் முதல் பந்தில் பவுண்டரி அடிப்பது சேவாக்கின் ஸ்பெஷல்.

சேவாக் இந்திய அணிகாக 104 டெஸ்ட் போட்டிகளிலும் 251 ஒருநாள் போட்டிகளிலும் 19 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.