இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக கெத்தாக வலம்வருகிறது. இந்திய அணி எல்லா காலக்கட்டத்திலுமே பேட்டிங்கில் சிறந்த அணியாகத்தான் திகழ்ந்துள்ளது. ஆனால் தற்போது பவுலிங்கிலும் தலைசிறந்து விளங்குவதால்தான் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த மற்றும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. பும்ராதான் இந்திய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்தி செல்கிறார். அவர் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் நடப்பு வங்கதேச தொடர் ஆகியவற்றில் ஆடவில்லை. 

ஆனால் பும்ரா இல்லாத குறை தெரியாத அளவிற்கு அபாரமாக பந்துவீசி, இந்திய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னின்று வழிநடத்தி செல்கிறார் ஷமி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக வீசிய ஷமி, வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியிலும் சிறப்பாக வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக வீசி விக்கெட்டுகளை வாரி குவிப்பதால், இரண்டாம் இன்னிங்ஸின் நாயகன் என அழைக்கப்படுகிறார் ஷமி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில், படுமந்தமான அந்த பிட்ச்சில் மிரட்டலாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். விசாகப்பட்டினம் பிட்ச்சில் ஃபாஸ்ட் பவுலர் விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதே கடினமான காரியம். அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி. அதேபோல வங்கதேசத்துக்கு எதிரான இந்தூர் டெஸ்ட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதன்மூலம் 2018ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இரண்டாவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையுடன் கெத்தாக நடைபோடுகிறார் ஷமி. தற்போதைய சூழலில், உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பவுலர் ஷமி தான் என பல முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்துள்ளனர். 

இந்நிலையில், ஷமியை கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஷமி குறித்து பேசிய கவாஸ்கர், ஷமி பந்துவீச ஓடிவரும்போது, சிறுத்தை வேட்டைக்கு செல்வது போலவே உள்ளது. அவரது சீம் பொசிசனும் ரிஸ்ட் பொசிசனும் மிகச்சிறப்பாக உள்ளது. பந்தை வீசப்போகும் அந்த கடைசி நொடியில், ஆள்காட்டி விரலின் மூலம் பந்தை அவுட் ஸ்விங் செய்கிறார். அதேபோல நடுவிரலை சுண்டி இன் ஸ்விங் செய்கிறார். கடுமையான பயிற்சியின் மூலம் இதில் எக்ஸ்பெர்ட் ஆகியிருக்கிறார் ஷமி. அவரது பவுலிங் அபாரம் என கவாஸ்கர் புகழ்ந்திருக்கிறார்.