2004ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிவரும் தோனி, 2007ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த பெருமைமிக்க தோனி, கேப்டன்சியிலிருந்து விலகி அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். 

தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் கேப்டன் கோலி, தோனியின் ஆலோசனையை பெற்றே செயல்படுகிறார். இக்கட்டான சூழல்களில் முடிவுகளை எடுக்கும் கெத்தாக வீரராக அணியில் இருக்கிறார். இந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

எனவே அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று ஆடிய போட்டிதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும். அந்த வகையில், ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

ராஞ்சியில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியின்போது சஞ்சய் மஞ்சரேக்கர், கவாஸ்கர் ஆகியோர் வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து டெண்டுல்கர், டிராவிட் போன்ற சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணியை தோனி வழிநடத்தினார். ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தின் பெவிலியனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்திற்கு? என்று கேள்வி எழுப்பினார்.

சஞ்சய் மஞ்சரேக்கரின் கேள்விக்கு பதிலளித்த கவாஸ்கர், பெவிலியனுக்கு மட்டுமல்ல, இந்த மண்ணின் மகனான தோனியின் பெயரை ராஞ்சி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கே வைக்கலாம். அதற்கு தோனி தகுதியான நபர் தான் என்பதால் தோனியின் பெயரை ராஞ்சி ஸ்டேடியத்திற்கே வைக்கலாம் என கவாஸ்கர் பரிந்துரை செய்தார்.