ரோஹித் சர்மா தலைசிறந்த ஒருநாள் மற்றும் டி20 தொடக்க வீரராக ஜொலித்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்துவருகிறார். 

டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காத ரோஹித் சர்மாவிற்கு, உலக கோப்பைக்கு பின்னர் டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரோஹித் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதற்கிடையே கேஎல் ராகுல் தொடர்ச்சியாக சொதப்பியதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ராகுல் நீக்கப்பட்டு, ரோஹித் தான் தொடக்க வீரர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ரோஹித் சர்மாவால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறந்த தொடக்க வீரராக ஜொலிக்க முடியும் என கங்குலி, கம்பீர் ஆகியோர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கின்றனர். 

ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டிலும் மிடில் ஆர்டரில் சரியாக ஆடவில்லை. அவர் மிடில் ஆர்டரில் இறங்கிய முதல் 87 ஒருநாள் போட்டிகளில் வெறும் 2 சதங்களுடன் 30 ரன்கள் மட்டுமே சராசரியாக வைத்திருந்தார். 2013ல் தோனி, அவரை தொடக்க வீரராக இறக்கியதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாம் வரலாறு. தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர், 3 இரட்டை சதங்களை விளாசி உலக சாதனை படைத்துள்ளார். இனிமேல் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாக அது திகழ்கிறது. 

எனவே அதேபோலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித்தால் ஜொலிக்க முடியும் என்பதே பல முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. தென்னாப்பிரிக்க தொடர் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மாவிற்கு கவாஸ்கர் ஒரு ஆலோசனையை கூறியுள்ளார். ரோஹித் அதை மட்டும் செய்தால், சேவாக்கை விட வெற்றிகரமான தொடக்க வீரராக ஜொலிக்கமுடியும் என கவாஸ்கர் நம்புகிறார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், வெள்ளை பந்துக்கும் சிவப்பு பந்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் ஆடப்படும் வெள்ளை பந்து, ஐந்து ஓவர்கள் வரை தான் ஸ்விங் ஆகும். அதன்பின்னர் ஸ்விங் நின்றுவிடும். ஆனால் சிவப்பு பந்து, 40 ஓவர் வரை ஸ்விங் ஆகும். அதனால் ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டு ஆடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதுமட்டுமல்லாமல் ரோஹித், இன் ஸ்விங்காகி உள்ளேவரும் பந்துகளில் தடுமாறுகிறார். அவரது ஷாட் செலக்‌ஷன் சரியாக அமைந்தால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரன்களை குவித்துவிடுவார். 

சேவாக்கை மாதிரியான சிறந்த தடுப்பாட்ட டெக்னிக்கை ரோஹித் பெற்றிருக்கவில்லை. ஆனால் சேவாக்கைவிட அதிகமான ஷாட்டுகளை ரோஹித் வைத்திருக்கிறார். சேவாக் அதிகமாக லெக் திசையில் அடிக்கமாட்டார். ஆனால் ரோஹித் அசால்ட்டாக புல் ஷாட், ஹூக் ஷாட்டுகளை ஆடுவார். அதனால் தடுப்பாட்ட உத்தியை மட்டும் ரோஹித் வளர்த்துக்கொண்டால், சேவாக் மாதிரியான சிறந்த டெஸ்ட் தொடக்க வீரராக ரோஹித்தால் ஜொலிக்க முடியும் என கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார்.