கொரோனாவை தடுத்து கொரோனாவிலிருந்து நாட்டை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு தினம் தினம் அதிகரித்துவருகிறது. அதனால் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏழை, எளிய மக்களும் தினக்கூலி தொழிலாளர்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் வருவாயை இழந்து கடும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாக அமையும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 13வது சீசன் ஊரடங்கால் தள்ளிப்போன நிலையில், எப்போது நடத்தப்படும் என்பது தெரியவில்லை. 

இந்நிலையில், ஐபிஎல் குறித்து பேசியுள்ள கம்பீர், ஒரு அரசியல்வாதியாக, என்னிடம் கேட்டால், நாட்டு மக்களின் நலனை காப்பதே முக்கியம் என்பேன். ஆனால் மக்கள் இப்போதிருக்கும் அழுத்தமான மனநிலையிலிருந்து விடுபட ஐபிஎல் மருந்தாக அமையும். ஐபிஎல்லில் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நாட்டு மக்களை அழுத்தமான மனநிலையிலிருந்து ரிலாக்ஸ் செய்ய ஐபிஎல்லால் தான் முடியும்.

வெற்றி தோல்விகளை கடந்து நாட்டின் ஸ்பிரிட்டை உயர்த்துவதற்கு ஐபிஎல்லால் முடியும். மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் கூட, ஐபிஎல்லை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். அது அவர்களது மனநிலையை மாற்றும். ரசிகர்களே இல்லாமல், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல், வெற்றி தோல்விகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஐபிஎல்லை நடத்தினால், அதில் ஜெயிப்பது எந்த அணியும் அல்ல: ஜெயிப்பது நாடு தான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல்லை நடத்தும் ஐடியா பிசிசிஐக்கு இல்லை. இந்நிலையில் தான் கம்பீர், நாட்டு மக்களின் மனநிலையை மாற்றுவதற்காக எப்படி வேண்டுமானாலும் ஐபிஎல்லை நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.