சர்வதேச கிரிக்கெட்டில் களத்திலும், களத்திற்கு வெளியேயும் சண்டைக்காரர்கள் என்றால், அது கம்பீரும் அஃப்ரிடியும் தான். இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய காலத்திலிருந்து, ஓய்வு பெற்ற பின்னரும் கூட, இருவருக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான். 

2007ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டியில் தொடங்கியது இவர்களது மோதல். 13 ஆண்டுகளாக இன்றுவரை அந்த மோதல் தொடர்ந்துவருகிறது. களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் அந்த மோதல் தொடர்கிறது. 

அஃப்ரிடி அவ்வப்போது, இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும் காஷ்மீர் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பதும், அதற்கு கவுதம் கம்பீர் பதிலடி கொடுப்பது வாடிக்கையாக நடந்துவருகிறது. அண்மையில் கூட பிரதமர் மோடி குறித்த அஃப்ரிடியின் விமர்சனத்திற்கு, அஃப்ரிடியுடன் இம்ரான் கானையும் இழுத்து ஜோக்கர்ஸ் என்று பதிலடி கொடுத்திருந்தார் கம்பீர். 

இருவருக்கும் இடையேயான மோதல் ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அஃப்ரிடி, விரைவில் குணமடைய வேண்டும் என்று கம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளார். 

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ், சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி தொற்றிவருகிறது. அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதை அவரே டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், கருத்து வேறுபாடுகளை கடந்து, அஃப்ரிடி விரைவில் குணமடைய வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், யாருமே கொரோனாவால் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் அனைவரது விருப்பமும்.  அஃப்ரிடியுடன் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் எனக்கு உள்ளன. ஆனால் அவர் விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.