Asianet News TamilAsianet News Tamil

கனேரியா விவகாரம்.. வழக்கம்போல பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட கம்பீர்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியாவிற்கு, அவர் ஆடிய காலத்தில், அவர் இந்து என்பதற்காக அவர் மீது அரங்கேற்றப்பட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

gautam gambhir speaks about former pakistan cricketer danish kaneria issue
Author
India, First Published Dec 27, 2019, 4:17 PM IST

அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கனேரியாவுடன் ஆடிய அவரது சக வீரருமான ஷோயப் அக்தர், சில உண்மைகளை வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டார். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய அக்தர், எனது கெரியரில், பிராந்திய ரீதியான பிரிவினையை தூண்டும் விதமாக பேசும் 2-3 வீரர்களுடன் சண்டை போட்டிருக்கிறேன். கராச்சி, பஞ்சாப், பெஷாவர் என, அணிக்குள் பிராந்திய ரீதியான பாகுபாட்டை திணித்து சீற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசுவார்கள். அவர்களுடன் நான் சண்டை போட்டிருக்கிறேன். ஒருவர் இந்து மதத்தை சேர்ந்த வீரராக இருந்தால், அதனால் என்ன..? அவர் சிறப்பாக ஆடி அணிக்காக நல்ல பங்களிப்பு செய்வதுதான் முக்கியம். 

gautam gambhir speaks about former pakistan cricketer danish kaneria issue

ஆனால் அவரை இந்து என்பதற்காக சில வீரர்கள் ஒதுக்கினர். டேபிளில் இருந்து நீ எப்படி சாப்பாட்டை எடுக்கலாம்? என்று கேட்பார்கள். அவருடன் இணைந்து சாப்பிடக்கூட மாட்டார்கள். ஆனால், இதே இந்து வீரர் தான் இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை வாரிக்குவித்தார். அவரது அபாரமான பவுலிங்கால்தான் பாகிஸ்தான் அணி தொடரையே வென்றது. கனேரியா இல்லாமல் அந்த தொடரை வென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கான கிரெடிட்டை கூட அவருக்கு சக வீரர்கள் கொடுக்கவில்லை என்று உண்மையை உரக்க சொன்னார் அக்தர். 

இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசாமல் இருந்த கனேரியா, அக்தரின் கருத்துக்கு பிறகு தைரியத்துடன் பேசினார். பாகிஸ்தான் அணியில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசிய கனேரியா, ஷோயப் அக்தர் ஒரு லெஜண்ட். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றுமே உண்மை. நான் ஆடிய காலத்தில் இதுகுறித்தெல்லாம் பேசுவதற்கு எனக்கு தைரியமில்லை. ஆனால் அக்தர் பேசியதால், நானும் பேசுகிறேன். அக்தர் எப்போதுமே எனக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். அதேபோல இன்சமாம் உல் ஹக், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய வீரர்களும் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்திருக்கின்றனர். நான் இந்து என்பதால் என்னிடம் சரியாக பழகாமல், ஒதுக்கிவைத்த வீரர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்தார். 

gautam gambhir speaks about former pakistan cricketer danish kaneria issue

மேலும் அதன்பின்னர் வெளியிட்ட அறிக்கையில், தனது வாழ்க்கை மிகவும் மோசமாக இருப்பதாகவும், கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன்; எனவே கஷ்டத்தில் இருக்கும் எனக்கு உதவ வேண்டும் என பிரதமர் இம்ரான் கான் உட்பட அனைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஸ்பாட் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கிய கனேரியாவிற்கு 2012ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கனேரியா விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர், இதுதான் பாகிஸ்தானின் உண்மையான முகம். இந்திய அணிக்கு முகமது அசாருதீன் கேப்டனாக இருந்துள்ளார். 80-90 டெஸ்ட் போட்டிகளுக்கு அசாருதீன் கேப்டன்சி செய்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரர் தான் பாகிஸ்தானின் பிரதமராக இருக்கிறார். இருந்தும் அவர்களின் மனநிலை இவ்வளவுதான். இதுதான் பாகிஸ்தானின் உண்மை முகம். கனேரியா பாகிஸ்தான் அணிக்காக 60(61) டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அப்படிப்பட்ட வீரர் மீதான ஒடுக்குமுறைகள் வெட்கக்கேடானவை என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

gautam gambhir speaks about former pakistan cricketer danish kaneria issue

இந்தியாவிற்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் எதிரான பாகிஸ்தான் வீரர்களின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்து நோஸ்கட் செய்யும் கம்பீர், தற்போது கனேரியா விவகாரத்திலும் பாகிஸ்தானை விமர்சித்திருக்கிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios