உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வும் பெறாமல், அணியிலும் ஆடாமல் மௌனம் காத்துவருகிறார் தோனி. அவருக்கு ஆதரவாக தேர்வுக்குழு, அணி நிர்வாகம் என அனைத்துமே செயல்படுகிறது. 

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் அவரது கெரியர் முடிந்துவிட்டது. எனவே அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை உருவாக்கும் பணியை அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தொடங்கிவிட்டது. உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி, ஓய்வும் அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் இந்திய அணியிலும் இடம்பெறுவதில்லை. ராணுவ பயிற்சிக்கு செல்வதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து ஒதுங்கினார். 

அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் தோனி இல்லை. அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார். தோனி எந்த காரணமும் இல்லாமல், வேண்டுமென்றே இந்த தொடர்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக கம்பீர் கருதுகிறார். 

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், ஓய்வு என்பது தனிப்பட்ட ஒரு வீரரின் முடிவு. இந்திய அணியில் ஆடுவது குறித்த தோனியின் எதிர்கால திட்டம் என்ன என்று அவரிடம் பேசி அணி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை அவர் தொடர்ந்து ஆடுவதாக இருந்தால், அவர் அணியில் இருக்க வேண்டும். அதைவிடுத்து எந்த தொடரில் ஆடவேண்டும் என்பதை அவரே முடிவெடுக்க கூடாது என்று கடும் காட்டமாக கம்பீர் தெரிவித்துள்ளார். 

தோனியின் விளம்பர ஒப்பந்தங்கள் 2021 வரை இருப்பதால், கண்டிப்பாக இன்னும் ஒன்றரை ஆண்டுக்கு அவர் ஓய்வு அறிவிக்கமாட்டார். ஓய்வு அறிவித்தால், அது அவரது வருமானத்தை பாதிக்கும். அதனால் இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கமாட்டார் என்று கம்பீர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதேபோலவே, கம்பீர் இப்போது சொல்லியிருக்கும் கருத்திலும் உண்மை இருக்கிறது. 

அடுத்த விக்கெட் கீப்பரை உருவாக்கும் வரை, ஓய்வு அறிவிக்காமல் இருந்து தோனி ஒத்துழைப்பு கொடுக்கிறார் என எத்தனை நொண்டிச்சாக்குகள் சொல்லப்பட்டாலும், அவற்றையெல்லாம் கம்பீர் அவ்வப்போது தகர்த்து கொண்டிருக்கிறார்.