தோனியுடனான உறவு குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை கவுதம் கம்பீர் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு உலக கோப்பைகளை வென்று கொடுத்தவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற கம்பீர், பாஜகவில் இணைந்து, தற்போது டெல்லி கிழக்கு தொகுதி எம்பியாக இருக்கிறார். 

தோனி தலைமையில் இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு தொடர்களின் இறுதி போட்டியிலும் கம்பீர் தான் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே மிகவும் நேர்மையுடன், உண்மைக்கு பின் நின்று, உண்மையையே பேசுபவர் கம்பீர். அந்தவகையில், தோனியை பற்றி எதிர்மறையாகவும், அதேவேளையில் அவரது கேப்டன்சி திறன் மற்றும் திறமை குறித்த நேர்மறையான விஷயங்களையும் இதற்கு முன் கம்பீர் பலமுறை பேசியிருக்கிறார். 

இந்நிலையில், தோனியும் தானும் ஒரே அறையில் தங்கியிருந்தது குறித்து பகிர்ந்துள்ளார் கம்பீர். இதுகுறித்து பேசிய கம்பீர், நானும் தோனியும் ஒரு மாதம் ஒரே அறையில் தங்கியிருக்கிறோம். அப்போது முடியை பற்றித்தான் அதிகமாக பேசுவோம். தோனி அவரது முடியை எப்படி பராமரிக்கிறார் என்று பேசுவோம். நாங்கள் தரையில் படுத்தது நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் அறை மிகவும் சிறியது என்பதால், அறையை பெரிதாக்க என்ன செய்வதென்று யோசித்தோம்.. பின்னர் பெட்டை அப்புறப்படுத்திவிட்டு, தரையில் படுத்து உறங்கினோம் என்று தோனியுடனான இனிமையான நினைவுகள் குறித்து கம்பீர் பகிர்ந்துள்ளார்.