இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்கு தொகுதி பாஜக எம்பியுமான கவுதம் கம்பீரின் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர். 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய தொடர்களிலும் சிறப்பாக ஆடி இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர். குறிப்பாக அந்த 2 உலக கோப்பைகளின் இறுதி போட்டியிலும் அசத்தலாக ஆடினார்.

ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்று கொடுத்த கம்பீர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.

2019 மக்களவை தேர்தலில், டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்று, எம்பி ஆனார். இந்நிலையில், தனது குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கம்பீர், கொரோனாவை எளிதாக எடுத்துக்கொள்ளாமல், கொரோனா நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.