ஐபிஎல்லில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத 3 அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாததற்கு காரணம், அந்த அணியின் கோர் டீம் வலுவாக இல்லாததுதான். 

கோர் டீம் வலுவாக இல்லாததற்கு காரணம், வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் சரியாக ஆடாதபோதிலும், அவர்களுக்கு தொடர் வாய்ப்பளிக்காததுதான். ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால், ஆர்சிபி அணியிலிருந்து அந்த வீரர் தூக்கியெறியப்படுவார். ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்து பெரும் தொகைக்கு ஏடுக்கப்படுவார். அவர் ஒரு சீசனில் சரியாக ஆடவில்லை என்றால், அடுத்த சீசனில் தூக்கியெறியப்படுவார். இதுதான் அந்த அணியின் பெரும் பிரச்னை. அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு முக்கியமான காரணமும் இதுதான்.

ஆனால் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கேகேஆர் ஆகிய அணிகள், வீரர்கள் மீது நம்பிக்கை வைத்துவிட்டால், அவர்கள் சரியாக ஆடவில்லை என்றாலும், அவர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடாமல் தொடர் வாய்ப்பளிக்கின்றன. 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக, அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுள்ள நிலையில், ஆர்சிபி அணி கடந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்புடன் அதிக தொகை கொடுத்து எடுத்த ஆரோன் ஃபின்ச் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய பெரிய வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் செய்யும் அதே வேலையைத்தான் இம்முறையும் செய்துள்ளது.

இந்நிலையில், கேகேஆருக்கும் ஆர்சிபிக்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்று, கேகேஆர் அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய 2 ஆண்டும் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், தினேஷ் கார்த்திக் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. சீசனின் இடையில் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனாலும் அவரை கேகேஆர் அணி தக்கவைத்துள்ளது. கேகேஆர் அணி, தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு சீசன் சரியாக அமையவில்லை என்றாலும், அவருக்கு ஆதரவாக இருக்கிறது. அது தினேஷ் கார்த்திக்கின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இதுதான் கேகேஆருக்கும் ஆர்சிபிக்கும் இடையேயான வித்தியாசம் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.