டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார் கௌதம் கம்பீர்.
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் உருவாகியுள்ள நிலையில், வலுவான ஆடும் லெவனை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது இந்திய அணி.
ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஷமி, ராகுல் ஆகிய 5 முக்கியமான சீனியர் வீரர்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஆடிவருகிறது. ரோஹித், ராகுல் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாத வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட இஷான் கிஷன் 2 போட்டிகளிலும் அபாரமாக பேட்டிங் ஆடினார். முதல் போட்டியில் 48 பந்தில் 76 ரன்களும், 2வது போட்டியில் 21 பந்தில் 34 ரன்களும் அடித்து, இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் இஷான் கிஷன்.
ரோஹித், ராகுல், கோலி இந்திய அணிக்கு திரும்பிய பின்னரும் ஆடும் லெவனில் இஷான் கிஷனுக்கு இடமளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழுமளவிற்கு சிறப்பாக ஆடியிருக்கிறார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார் கம்பீர். அதில் ராகுலுக்கு இடம் இல்லை.
ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும். 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆடவேண்டும் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார். எனவே விராட் கோலி 4ம் வரிசையில் இறங்கவேண்டும் என்பது கம்பீரின் கருத்து.
அதன்பின்னர் பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஆடுவார்கள் என்பதால், கம்பீரின் கருத்துப்படி கேஎல் ராகுலுக்கு அணியில் இடம் இல்லை என்பதே தெரிகிறது.
