விராட் கோலியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் எதுவென்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன். டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 70 சர்வதேச சதங்களுடன், அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளார் விராட் கோலி. 

விராட் கோலியின் கெரியர் முடிவதற்குள் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி இலக்கை விரட்டுவதில் வல்லவர். சேஸிங்கில் கிங்காக திகழும் கோலி, பலமுறை அருமையாக ஆடி சதமடித்து இலக்கை விரட்டி இந்திய அணி வெற்றி பெற உதவியிருக்கிறார். 

இந்நிலையில், அவரது சிறந்த இன்னிங்ஸ் எதுவென்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய கம்பீர், விராட் கோலி 3 விதமான போட்டிகளிலும் நிறைய நல்ல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால் 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக எதிராக அவர் ஆடியது தான் அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ்.

330 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது ரன்னே அடிக்காமல் முதல் விக்கெட்டை இழந்துவிட்டோம். எனவே முதல் ஓவரிலேயே களத்திற்கு வந்த விராட் கோலி, 330 ரன்கள் என்ற சேஸிங்கில் 183 ரன்களை அவர் மட்டுமே சேர்த்துக்கொடுத்தார். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக... அப்போது கோலி அனுபவம் வாய்ந்த வீரர் கூட கிடையாது. என்னை பொறுத்தமட்டில், அதுதான் விராட் கோலியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று கருதுவதாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

அந்த குறிப்பிட்ட போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது. 330 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கம்பீர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் சச்சினுடன் ஜோடி சேர்ந்த கோலி மிகச்சிறப்பாக ஆடினார். சச்சின் டெண்டுல்கர் அரைசதம் அடித்து அவுட்டான போதிலும், அதன்பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கோலி 183 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் கோலியின் அதிரடியான பேட்டிங்கால் இந்திய அணி 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.