ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுவதே ஆர்சிபிக்கு வாடிக்கையாகிவிட்டது.

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அணியில் இருந்தும், அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவாக இல்லாததும், வீரர்களை சேர்ப்பதும் நீக்குவதுமாக, நிச்சயமற்ற தன்மையிலான அணியாக ஆர்சிபி திகழ்ந்ததும் தான் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம்.

மேலும் அந்த அணி எப்போதுமே பேட்டிங்கில் மட்டும் வலுவான அணியாகவும் ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் பலவீனமான அணியாகவுமே திகழ்ந்துள்ளது. அதனால்தான் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தும் கூட, பெரிய ஸ்கோரைக்கூட கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியுள்ளது.

அதுமட்டுமல்லாது அந்த அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானம் மிகச்சிறியது என்பதாலும், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதாலும், ஆர்சிபி அணி மோசமான பவுலிங் யூனிட்டை பெற்றிருந்ததால், அந்த அணி எவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தாலும் எதிரணி, அந்த இலக்கை விரட்டி வெற்றி பெற்று, ஆர்சிபி அணியின் முகத்தில் கரியை பூசிவிடுகிறது. மற்ற அணிகளுக்கெல்லாம் ஹோம் மைதானத்தில் ஆடுவது அனுகூலமாக(இந்தியாவில் ஐபிஎல் நடைபெறும்போது) ஆர்சிபிக்கு மட்டும் பெங்களூருவில் நடப்பது பின்னடைவாகவே இருந்துவந்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் பெரியவை என்பதாலும், அந்த ஆடுகளங்கள் ஃப்ளாட்டாக இல்லாமல், ஸ்பின்னிற்கு சாதகமாக இருப்பதாலும் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு அது பலமாக அமையும். ஏனெனில் ஆர்சிபி அணியில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் என தரமான ஸ்பின் யூனிட் உள்ளது.

எனவே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் கேப்டன் கோலி, இந்த சீசனில் ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், கேன் ரிச்சர்ட்ஸன் போன்ற சிறந்த வெளிநாட்டு வீரர்களை அணியில் பெற்றிருப்பதால், அணி வலுவான காம்பினேஷனை பெற்றிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கோலி, இந்த சீசனுக்கான ஆர்சிபி  அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் திகழ்வதாகவும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 2016க்கு பிறகு இப்போதுதான் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளதாக கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆர்சிபி அணி குறித்தும் விராட் கோலியின் கருத்து குறித்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் கம்பீர்,  ஆர்சிபி அணி 2016க்கு பிறகு இந்த சீசனில் தான் நல்ல பேலன்ஸான அணியாக உள்ளது என்றால், இடைப்பட்ட சீசன்களில் அணி காம்பினேஷன் சரியில்லை என்பதை கேப்டன் கோலி உணர்ந்திருக்கிறார் என்றே அர்த்தம். அணி வலுவாக இல்லாதபட்சத்தில், வீரர்கள் தேர்வில் ஒரு கேப்டனாக கோலி அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை.

ஆர்சிபி அணி இந்த முறை நன்றாக இருக்கிறது என்று கேப்டன் கோலி கருதினால், உறுதிப்படுத்தப்பட்ட ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யாமல் குறைந்தது 7 போட்டிகளிலாவது ஆடவேண்டும். இந்த சீசனிலும் ஆர்சிபி அணி பேட்டிங்கில் மட்டுமே டபுள் பவராக இருப்பதாக கருதுகிறேன்.

ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு ஒரேயொரு அனுகூலம் என்னவென்றால், ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதுதான். இந்த சீசன் அமீரகத்தில் நடப்பதால், ஆர்சிபி பவுலர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஏனெனில் 7 போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆட வேண்டிய அவசியம் இல்லை. சின்னசாமி மைதானம்தான் இந்தியாவிலேயே மிகச்சிறிய மைதானம்; அதுமட்டுமல்லாது ஃப்ளாட்டான ஆடுகளம் என்பதால், பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த முறை ஐபிஎல் அமீரகத்தில் நடப்பதால், துபாய், அபுதாபி ஆடுகளங்கள் பெரியவை என்பதால், இது ஆர்சிபி அணியின் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்று கம்பீர் தெரிவித்தார்.

மேலும், ஆர்சிபி அணி எந்த 4 வெளிநாட்டு வீரர்களை ஆடும் லெவனில் எடுக்கப்போகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்தார்.