ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 300 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான் முக்கியமான காரணம். இதற்கு முந்தைய, எல்லா காலக்கட்டத்திலும் இருந்த இந்திய அணிகளும் பேட்டிங்கில் தலைசிறந்தே விளங்கியுள்ளன. 

ஆனால் தற்போதைய இந்திய அணியில் பவுலிங் சிறந்து விளங்குவதுதான் கூடுதல் பலம். பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பும்ரா ஆடவில்லை. ஆனாலும் கூட ஷமி-இஷாந்த்-உமேஷ் கூட்டணி அபாரமாக வீசிவருகிறது. 

அதிலும் ஷமியின் பவுலிங் வேற லெவலில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்வதால், இரண்டாவது இன்னிங்ஸின் நாயகன் என ஷமி அழைக்கப்படுகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு பின்னர், ஷமியின் பவுலிங்கை வர்ணனையாளர்களான கவாஸ்கரும் கம்பீரும் வெகுவாக புகழ்ந்தனர். அதிலும் கம்பீர், ஷமியை தாறுமாறாக புகழ்ந்தார். தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பவுலர் ஷமி தான் என்று கம்பீர் கூறினார். 

ஷமி குறித்து பேசிய கம்பீர், ஷமி வீசும் ஒவ்வொரு பந்திலுமே விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் வீசுகிறார். அதனால்தான் ஒவ்வொரு பந்திலும் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது. ஒவ்வொரு பந்திலும் விக்கெட் முனைப்புடன் வீசும் பவுலரை எதிர்கொள்வது எந்த எதிரணி பேட்ஸ்மேனுக்கும் கடினம். வங்கதேசம் இந்தியாவிற்கு ஈடான எதிரணி அல்ல. ஆனால் ஷமி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இப்போதைய சூழலில் பந்தின் கலர் முக்கியமே இல்லை. மஞ்சள் பந்து, பிங்க் பந்து, சிவப்பு பந்து என எதை ஷமியிடம் கொடுத்தாலும் அவர் அபாரமாக வீசுவார். தற்போதைய சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த பவுலர் ஷமி தான் என்று கம்பீர் புகழ்ந்தார்.