பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதன் மூலம், பள்ளி, கல்லூரி, வேலை முடிந்து மாலை நேரத்தில் ரசிகர்கள், போட்டியை காண மைதானத்திற்கு வருவார்கள் என்பதால், டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை கவர பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதும் அவசியம். 

அதை அறிந்த கங்குலி, பிசிசிஐயின் தலைவரானதுமே, வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்திக்காட்டினார். அதுவும் தனது சொந்த மண்ணான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி, ரசிகர் கூட்டத்தை கவர்ந்து அசத்தினார். 

கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைத்தது. ஆனால் இந்திய அணி ஒப்புக்கொள்ளாததால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது. 

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு, சூழல்கள் மாற தொடங்கியுள்ளன. பிசிசிஐ தலைவரானதுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி காட்டியுள்ளார் கங்குலி. அதனால் இனிமேல் இந்திய அணி வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் அழைக்கும்போதும் பகலிரவு போட்டிகளில் ஆட உடன்படும் என்று எதிர்பார்க்கலாம். 

இதை வாய்ப்பாக பயன்படுத்தி இந்திய அணிக்கும் கேப்டன் கோலிக்கும் சவால் விடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேசியிருந்தார். இதுகுறித்து பேசிய டிம் பெய்ன், ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் ஆடுவது குறித்து விராட் கோலியிடம் கேட்போம். அவர் அதற்கு உடன்பட்டால், பிரிஸ்பேனில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடிவிடலாம். கோலி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று டிம் பெய்ன் தெரிவித்திருந்தார். 

இவ்வாறாக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் அதிகம் நடக்கக்கூடிய சூழல்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், இனி ஒவ்வொரு தொடரிலும் ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்தலாம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, எல்லா டெஸ்ட் போட்டியையும் பகலிரவு போட்டியாக நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் ஒரு தொடரில் ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக நடத்தலாம். இதுதொடர்பாக போர்டில் உள்ள மற்றவர்களிடமும் எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு மற்ற இடங்களில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த முயற்சிப்போம். அனைவருமே தயாராகத்தான் உள்ளனர். வெறும் 5000 ரசிகர்களுக்கு முன் டெஸ்ட் போட்டியை ஆட யாருமே விரும்பவில்லை என்று கங்குலி தெரிவித்தார்.