உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதி போட்டி நடக்கவுள்ளது. நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. அந்த போட்டியில் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நிலையில், ஐந்தாம் வரிசையில் அனுபவ வீரர் தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பியது மிகப்பெரிய தவறு. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த பிறகாவது தோனி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கு பிறகும் பாண்டியா தான் அனுப்பப்பட்டார். ரிஷப் - பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்ட தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதங்கம். 

இதே கருத்தைத்தான் முன்னாள் கேப்டன் கங்குலியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, விக்கெட்டுகள் சரிந்துகொண்டிருந்த நிலையில், ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்காமல் தினேஷ் கார்த்திக்கையும் அதன்பின்னர் பாண்டியாவையும் இறக்கியது தவறு என்று கூறியுள்ளார். தோனியை இறக்கியிருந்தால் ரிஷப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். கடைசியில் அடித்து ஆட தினேஷ் கார்த்திக்கும் பாண்டியாவும் இருந்திருப்பார்கள். ஆனால் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கி தவறு செய்துவிட்டதாக தெரிவித்தார். அதேபோல ஷமியை எடுக்காததும் தவறு என்று கங்குலி தெரிவித்துள்ளார்.