இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் வெற்றி வேட்கை கொண்டவர். ஆக்ரோஷமான குணநலனுடைய கங்குலி, தனது ஆக்ரோஷத்தை அதிரடியான பேட்டிங்கில் மட்டுமல்லாது, கேப்டன்சியிலும் காட்டி, இந்திய அணியை சூதாட்டப்புகாருக்கு பின்னர் மறுகட்டமைப்பு செய்து வளர்த்தெடுத்தவர். 

மிகச்சிறந்த தலைமை பண்பு மற்றும் நிர்வாகத்திறன் கொண்ட சிறந்த கேப்டனாக அறியப்படும் கங்குலி, நல்ல பேட்ஸ்மேனும் கூட. ஆனாலும் கங்குலி அவரது பேட்டிங்கை கேப்டன்சிக்காகத்தான் அதிகமாக அறியப்படுகிறார். 

சிறந்த கேப்டனாக திகழ்ந்த அதேவேளையில், சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து, எதிரணிகளை தனது அதிரடியான பேட்டிங்கால் தெறிக்கவிட்டவர் கங்குலி. ஆஃப் திசையின் கடவுள் என்று கங்குலி அழைக்கப்படுகிறார். கங்குலி ஆஃப் திசையில் அடிக்கும் ஷாட்டுகளும், ஸ்பின் பவுலிங்கில் இறங்கிவந்து சிக்ஸர் அடிக்கும் ஷாட்டுகளும் கிரிக்கெட் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுபவை. 

இந்திய அணிக்காக 1996ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை ஆடினார். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7212 ரன்களையும், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களையும் குவித்துள்ளார். 

கங்குலியின் கிரிக்கெட் கெரியரில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்துள்ளன. கங்குலியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் பாதித்த சர்ச்சை நபர் கிரேக் சேப்பல். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் இடையேயான மோதல் பெரிய சர்ச்சையாக வெடித்தது. கங்குலியை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்லாது அணியிலிருந்தும் நீக்கினார் கிரேக் சேப்பல். 2005ல் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு பின்னர் கங்குலி அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 2006ம் ஆண்டு கம்பேக் கொடுத்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார் கங்குலி. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய கங்குலி, நான் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, நான் எனது நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. என்னுடைய கோச்(கிரேக் சேப்பல்), வாசிம் அக்ரம், மெக்ராத், அக்தர் ஆகிய பவுலர்களை எதிர்கொண்டு ஆடியதில்லை. ஆனால் நான் அவர்களையெல்லாம் 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக எதிர்கொண்டு ஆடியவன் நான். எனவே எனக்கு கம்பேக் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக ஆடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அணியிலிருந்து நீக்கப்படும்போது வருத்தமாக இருந்தாலும், ஒரு நொடி கூட நான் எனது நம்பிக்கையை மட்டும் இழந்ததில்லை என்று கங்குலி தெரிவித்தார்.