ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. 

எஞ்சிய 2 இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ், கேகேஆர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறாத அணியாக டெல்லி கேபிடள்ஸ் அணி திகழ்கிறது. அந்த அணி 2012க்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. 

இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், சிஎஸ்கேவை இரண்டாமிடத்திற்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது டெல்லி அணி. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி சிறப்பாக ஆடிவருகிறது. இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் டெல்லி அணி ஆடிவருகிறது. அதற்காக பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்தும் கூட, கங்குலியும் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

கங்குலி, பாண்டிங் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அந்த அணிக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக வழிநடத்துகின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி அனுபவம் மற்றும் இளம் துடிப்பான வீரர்களை உள்ளடக்கிய அணியாக திகழ்கிறது. 
சீசனின் முதல் பாதியில் பெரியளவில் வெற்றிகளை பெறவில்லை என்றாலும் இரண்டாம் பாதியில் தொடர் வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறது டெல்லி அணி. இந்நிலையில், டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கான காரணம் குறித்து ஆலோசகர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கங்குலி, எங்கள் அணி அனுபவமற்ற அணி என்று கூறமுடியாது. அனுபவம் மற்றும் இளம் துடிப்பான வீரர்கள் என இரு தரப்பையுமே உள்ளடக்கிய நல்ல அணி. அனுபவ வீரரான தவான் நல்ல ஃபார்மில் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தி அதிரடியாக ஆடுவது அணிக்கு உத்வேகமளிக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு டெல்லி அணி வீரர்கள் பதற்றமடையவோ பயப்படவோ இல்லை. தோற்றதற்காக நாங்கள் அணி வீரர்களை மாற்றவும் இல்லை. அதற்கேற்றவாறு எங்கள் வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்து எங்களை கௌரவப்படுத்திவிட்டார்கள் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.