கங்குலி கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது, அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை என்பது அவரது கூற்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிநடை போடவைத்தவர் முன்னாள் கேப்டன் கங்குலி. நிர்வாகத்திறனும் தலைமைத்துவ பண்புகளும் நிறைந்த கங்குலி, வெற்றிகரமான இந்திய கேப்டன்களில் முதன்மையானவர். பலமான அணியை கட்டமைப்பதில் அவர் சிறந்தவர். 

ஐபிஎல் 2008ல் தொடங்கியபோது, தனது சொந்த மண்ணான கொல்கத்தா அணியில் எடுக்கப்பட்டு, அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் அந்த அணியின் உரிமையாளர். 2008 ஐபிஎல்லில் 6ம் இடத்தை பிடித்தது கேகேஆர். கேகேஆர் அணியின் பயிற்சியாளர் புக்கானனுக்கும் கங்குலிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. 2009 சீசனில் கேப்டன் பொறுப்பிலிருந்து கங்குலி நீக்கப்பட்டார். அந்த சீசனில் 8ம் இடம் பிடித்தது கேகேஆர். இதையடுத்து 2010 சீசனில் மீண்டும் கேகேஆர் அணியின் கேப்டனாக்கப்பட்டார் கங்குலி. 

அதன்பின்னர் கங்குலி கேகேஆர் அணிக்கு ஆடவில்லை. கங்குலி தலைமையில் கேகேஆர் அணி கோப்பையையும் வெல்லவில்லை. வெகுசிறப்பாக ஆடி வெற்றிகளையும் குவித்துவிடவில்லை. கம்பீர் கேப்டனான பின்னர் தான், 2 முறை கோப்பையை வென்றது கேகேஆர். கங்குலி சிறந்த கேப்டன்; பாண்டிங், மெக்கல்லம், ஷோயப் அக்தர் என மிகச்சிறந்த வீரர்களும் அணியில் இருந்தார்கள். கேப்டன் மற்றும் வீரர்கள் என ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக இருந்தாலும், கங்குலி தலைமையில் பெரிதாக சாதிக்கவில்லை கேகேஆர். 

இந்நிலையில், ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய கங்குலி, கம்பீரின் இண்டர்வியூ ஒன்று பார்த்தேன். அதில், இது(கேகேஆர்) உங்கள் அணி; நான் எதிலும் தலையிடமாட்டேன் என்று தனக்கு ஷாருக்கான் முழு சுதந்திரம் அளித்ததாக கம்பீர் தெரிவித்திருந்தார். இதைத்தான், 2008ல் நான் ஷாருக்கானிடம் கூறினேன். அணியை என்னிடம் விட்டுவிடுங்கள்; நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஷாருக்கிடம் கூறினேன். ஆனால் அது நடக்கவில்லை. ஐபிஎல்லில் வெற்றிகரமாக திகழும் அணியில், முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு பொறுப்பு வீரர்களிடமே விடப்படும். சிஎஸ்கேவை பாருங்கள்; தோனி அருமையாக வழிநடத்தி கொண்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியும் அப்படித்தான். ரோஹித்திடம் போய், யாருமே அந்த வீரர்களை எடுங்கள் என்று சொல்வதில்லை. தோனி, ரோஹித்தெல்லாம் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று கங்குலி தெரிவித்தார்.