இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது. ஏராளமான முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் வெங்கடேஷ் பிரசாத் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவருமான கங்குலி போன்ற வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வரவிரும்பாமல் ஒதுங்குவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாகவே உள்ளது. 

இந்நிலையில், அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, கண்டிப்பாக எனக்கும் பயிற்சியாளர் ஆகும் விருப்பம் உள்ளது. ஆனால் இப்போது அல்ல; எதிர்காலத்தில் கண்டிப்பாக பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் எனது பெயரும் இருக்கும். இப்போது ஐபிஎல், மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றில் சில பொறுப்புகளில் இருப்பதோடு கிரிக்கெட் வர்ணனையும் செய்துவருகிறேன். எனவே இதெல்லாம் முடியட்டும், ஒரு கட்டம் கடக்கட்டும். பின்னர் எதிர்காலத்தில் கண்டிப்பாக பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.