2019ல் முதல்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலக கோப்பை நடத்தப்படுவதை போல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் இந்த ஆண்டு முதல் ஆரம்பித்துள்ளது ஐசிசி. இந்த ஆண்டு நடந்த ஆஷஸ் முதல் 2021 வரை அனைத்து அணிகளும் ஆடும் டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரியது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2021ல் லண்டன் லார்ட்ஸில் நடக்கும் இறுதி போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகள் காலங்காலமாக 5 நாட்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால்  இப்போதைய சூழலில் பெரும்பாலும் 4 நாட்களில் முடிந்துவிடுகின்றன. 

இந்நிலையில், 2023 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில், ஐசிசி நடத்தும் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து நடத்துவது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறது. இப்படி  4 நாட்களாக குறைத்து நடத்தும் பட்சத்தில், அந்த 8 ஆண்டுகளில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகளில் 335 நாட்கள் மீதமாகும் என்பது ஐசிசியின் கருத்து. ஆனால் இது எந்தளவிற்கு சாத்தியப்படும், கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவளிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி, அதுகுறித்து இப்போதே கருத்து தெரிவிக்க முடியாது. ஐசிசி அளிக்கும் திட்ட விளக்கத்தை முதலில் படிக்க வேண்டும். அதன்பின்னர் தான் எதுவாக இருந்தாலும் பேசமுடியும். சும்மா எதையாவது பேசமுடியாது என்று கங்குலி தெரிவித்துவிட்டார்.