இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டிருக்கும் நிலையில், இக்கட்டான சூழலில் தோனியை களமிறக்காதது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். 

மான்செஸ்டரில் நடந்துவரும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. ரிஷப்பும் பாண்டியாவும் ஓரளவுக்கு நம்பிக்கையளித்து வருகின்றனர். முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 239 ரன்கள் அடித்தது. 

240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித்தும் கோலியும் தலா ஒரு ரன்னில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். கோலி அவுட்டான அடுத்த ஓவரிலேயே ராகுலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

இப்படியான சூழலில் நிலைத்து நின்று ரிஷப் பண்ட் மாதிரியான இளம் வீரருக்கு ஆலோசனையையும் உத்வேகத்தையும் வழங்கி பார்ட்னர்ஷிப் அமைக்க ஐந்தாம் வரிசையில் தோனியைத்தான் இறக்கியிருக்க வேண்டும். ஆனால் 7ம் வரிசையில் இறக்குவதற்காக அணியில் வைத்திருந்த தினேஷ் கார்த்திக்கை அந்த வரிசையில் இறக்கினர். தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் அவுட்டாக, அதன்பின்னராவது தோனி இறங்குவார் என்று பார்த்தால் அப்போதும் தோனி இறங்காமல் ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார். 

இதையடுத்து வர்ணனை செய்துகொண்டிருந்த கங்குலி, தோனி இறக்கப்படாததை கண்டு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தார். அணி இக்கட்டான சூழலில் இருக்கும்போது தோனியை இறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய கங்குலி, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என காட்டமாக தனது கருத்தை பதிவு செய்தார். ரிஷப் பண்ட்டும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தான் தோனி களத்திற்கு வந்தார்.