உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணி தான் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதக்களமாக உள்ளது. 

உலக கோப்பைக்கான அணியில் மாற்று தொடக்க வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இடங்களை யார் யார் பிடிக்கப்போவது என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. 

இந்திய அணியில் இந்த ஆண்டில் அறிமுகமாகி, அறிமுகமான மாத்திரத்திலேயே தனது திறமையை நிரூபித்து உலக கோப்பை அணியில் இடம்பிடிக்க உள்ளார் விஜய் சங்கர். ஹர்திக் பாண்டியா மட்டுமே வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கும் நிலையில், விஜய் சங்கரும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக இருப்பதால் அவருக்கு அணியில் இடம்கிடைப்பது உறுதியாகிவிட்டது. 

ஜடேஜாவும் அணியில் ஆல்ரவுண்டராக இருப்பதால் இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கலாம். ஆனால் ஜடேஜாவை விட விஜய் சங்கருக்கான வாய்ப்புகள் தான் அதிகம். எனினும் விஜய் சங்கர் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே அணியில் எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவருமே ஆடினர். அந்த போட்டியில் ஆடிய அணிதான் கிட்டத்தட்ட உலக கோப்பைக்கான அணி என்று கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பார்க்கையில், ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்றாலும் உலக கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெறுவார் என்றே தெரிகிறது. 

ஆனால் இருவரில் ஒருவர் தான் என்றால், யாரை எடுக்கலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த கங்குலி, உலக கோப்பை அணியில் ஜடேஜா தேவையில்லை. நாக்பூர் போட்டியில் அபாரமாக பந்துவீசினார் விஜய் சங்கர். அவர் உலக கோப்பையில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார். அவரையே உலக கோப்பைக்கு அழைத்து செல்லலாம் என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக பேட்டிங் ஆடுவதால் ராயுடுவின் இடத்தை அவர் பிடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே ஆடும் லெவனில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.