உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஒருசில இடங்களுக்கு பரிசீலனையில் இருக்கும் வீரர்கள், ஆஸ்திரேலிய தொடரில் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

ரிசர்வ் விக்கெட் கீப்பர், ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் ஆகிய இடங்களுக்கான தேவை அணியில் உள்ளது. ரோஹித் - தவான் நிரந்தர தொடக்க ஜோடியாக உள்ளனர். ராகுல் மாற்று தொடக்க வீரராக இருப்பார். ரிசர்வ் விக்கெட் கீப்பர் என்ற இடத்தை தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் பிடிக்கப்போகிறார் என்பது இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. 

அதேபோல் ஹர்திக் பாண்டியா மட்டுமே அணியில் ஆல்ரவுண்டர். எனவே விஜய் சங்கர் - ஜடேஜா ஆகிய இருவரில் யார் உலக கோப்பை அணியில் இடம்பிடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் விஜய் சங்கர், கடைசி ஓவரை அருமையாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். இதையடுத்து விஜய் சங்கருக்கான வாய்ப்பு வலுவாகியுள்ளது.

ஜடேஜாவை பொறுத்தமட்டில் ஃபீல்டிங்கில் அசத்தினாலும் பேட்டிங் சரியாக ஆடுவதில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் ஸ்பின் பவுலர் என்பதால், அணியில் ஏற்கனவே குல்தீப், சாஹல், கேதர் ஜாதவ் ஆகிய ஸ்பின்னர்கள் இருப்பதால் ஜடேஜாவிற்கான வாய்ப்பு சந்தேகம்தான். 

ராஞ்சியில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் கூட விஜய் சங்கர் அருமையாக பேட்டிங் செய்தார். அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் வேறு வழியின்றி தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் ஜடேஜா படுமோசமாக பேட்டிங்கில் சொதப்பினார். விஜய் சங்கரை நேற்று 4ம் வரிசையில் இறக்கியிருந்தால் கோலிக்கு நெருக்கடி அதிகரித்திருக்காது. கோலி நிதானமாக ஆடி அணியை வெற்றி பெற செய்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. அந்தளவிற்கு நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினார். விஜய் சங்கரைக்கூட நான்காம் வரிசையில் பயன்படுத்தலாம். 

அந்த வகையில் விஜய் சங்கர் உலக கோப்பை அணியில் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. முன்னாள் கேப்டன் கங்குலியும் விஜய் சங்கருக்கு ஆதரவாகத்தான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, உலக கோப்பை அணியில் ஜடேஜா தேவையில்லை. நாக்பூர் போட்டியில் அபாரமாக பந்துவீசிய விஜய் சங்கர் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் என்று கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.