இந்திய அணியிலிருந்து தோனி ஓரங்கட்டப்பட்டுவிட்டார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டுவருகிறார். 

மூன்றுவிதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட்டே முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இவர் தான் எதிர்கால விக்கெட் கீப்பர் என்பதை இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டதால், அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளிலுமே ரிஷப் பண்ட் சொதப்பினார். நெருக்கடியான சூழலிலும் சொதப்பினார், நெருக்கடி இல்லாத நிதானமாக ஆட வாய்ப்பிருந்த சூழலிலும் சொதப்பினார். இவ்வாறு அவர் தொடர்ச்சியாக சொதப்பிவரும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக வாய்ப்புள்ள சஞ்சு சாம்சனும் இஷான் கிஷானும் சிறப்பாக ஆடிவருகின்றனர். அதனால் ரிஷப் பண்ட் மீதான நெருக்கடி அதிகரித்திருக்கிறது. 

ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப் பண்ட், சொதப்ப சொதப்ப அவர் மீதான அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் மீது தேவையில்லாமல் அதிக நெருக்கடி கொடுக்கப்படுவதாக முன்னாள் வீரர் அஜித் அகார்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர்தான் அணியின் டாப் வீரர்கள். அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்கக்கூடியவர்கள் தான். ஆனால் எக்ஸ் ஃபேக்டர் என்றால், ரிஷப் பண்ட் தான். ஒருசில ஓவர்களில் ஆட்டத்தை புரட்டிப்போடக்கூடிய, கேம் சேஞ்சர் அவர். போட்டிகளை ஜெயிப்பதற்கு ரிஷப் பண்ட் மாதிரி ஒரு வீரர் தேவை. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சக்தியாக அவரை பார்க்கிறேன். எனவே அவரது விஷயத்தில் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.