ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக ஜொலிக்கும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக இறங்கும் முதன்முறையாக கிடைத்துள்ளது. டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக இறங்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனக்கான இடத்தை டெஸ்ட் அணியிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். எனவே ரோஹித் சர்மாவின் மீதே அனைவரின் கண்களும் இருக்கின்றன. ரோஹித் சர்மாவும் நெருக்கடியில் இருக்கிறார். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், பேட்டிங் டெக்னிக்கை மாற்றாமல் அவரது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும் என்பது முன்னாள் ஜாம்பவான்களின் அறிவுரை. 

ரோஹித் சர்மாவிற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறிவருகின்றனர். இந்நிலையில், ரோஹித் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், ரோஹித்துக்கு தன்னை டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தக்கவைத்து கொள்வதற்கு தென்னாப்பிரிக்க தொடர் ஒரு அருமையான வாய்ப்பு. அதேநேரத்தில் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கிய பின்னர் ரோஹித் ஜொலிப்பது போலவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜொலிப்பார் என்று உறுதியெல்லாம் கூறமுடியாது. ரோஹித்துக்கு கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கும். அந்த நடுக்கம் அவருக்கு தன்மீது சந்தேகத்தை ஏற்படுத்தாமல் சக வீரர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.