வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி இந்திய அணியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தியதுடன் இன்னிங்ஸின் கடைசி ஓவரை மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே சைனி மிரட்டியுள்ளார். 

இந்நிலையில், சைனியை ஆரம்பத்தில் ஓரங்கட்ட நினைத்தவர்களை கம்பீர் தற்போது சீண்டியுள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சைனி, 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய திறன் பெற்றவர். இவரது திறமையை கண்ட கம்பீர், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது டெல்லி ரஞ்சி அணிக்காக செலக்சன் கமிட்டியில் இருந்த முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் வெளிமாநில வீரரை டெல்லி அணியில் ஆடவைக்கமுடியாது என்று காரணம் காட்டி கம்பீரின் கோரிக்கையை புறக்கணித்தனர். 

தற்போது இந்திய அணிக்காக ஆடவந்துவிட்டார் சைனி. இந்நிலையில், இந்திய அணிக்காக ஆடும் முன்னரே, பிஷன் சிங் பேடி மற்றும் சவுகான் என்ற 2 விக்கெட்டுகளை சைனி எடுத்துவிட்டார் என்று அவர்கள் இருவரையும் குத்திக்காட்டும்வகையில் சீண்டியுள்ளார் கம்பீர்.