ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா கண்டிப்பாக வரலாற்றில் இடம்பிடிப்பார். அந்தளவிற்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக ஆடி பல சாதனைகளை படைத்துவருகிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் ரோஹித் சர்மா தான். இனிமேல் இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஒருநாள் போட்டிகளில் அசாத்தியமான வீரராக திகழ்ந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் திணறிவருகிறார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சமயத்தில் நன்றாக ஆடினார். ஆனால் அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை. அதனால் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ரோஹித்திற்கு அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்திற்காக போராடும் ரோஹித் சர்மா, அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை. 

2018 தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரஹானேவிற்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருந்த ரோஹித் சர்மா, சரியாக ஆடாததால் அவர் நீக்கப்பட்டு மீண்டும் ரஹானேவே அணியில் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் புறக்கணிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் இடம்பிடித்தார். 

இவ்வாறு ஒதுக்கப்படுவதும் சேர்க்கப்படுவதுமாக இருந்த ரோஹித், உலக கோப்பையில் அபாரமாக ஆடி 5 சதங்களை அடித்தார். ரோஹித்தின் அபாரமான ஃபார்மை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. 

ரஹானே அல்லது ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாகத்தான் ரோஹித் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் இருவருமே நன்றாக ஆடிவருவதால் ரோஹித்துக்கான வாய்ப்பு கடினமாகிவிட்டது. ரஹானே கடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஹனுமா விஹாரியும் சிறப்பாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் பெரிதாக ஆடவில்லை என்றாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களை குவித்தார் விஹாரி. 

எனவே விஹாரி அவருக்கான இடத்தை இறுகப்பிடித்துவிட்டார். அதனால் ரோஹித்துக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். இன்று நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மாவிற்கு இடம் கிடைக்காது என்பது உறுதி. 

இந்நிலையில், ரோஹித்துக்கான வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா இனிமேல் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். ரஹானேவும் விஹாரியும் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவருகின்றனர். எனவே ரோஹித் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால், அதை வீணடித்துவிடாமல் கண்டிப்பாக நன்றாக ஆடி அவரை நிரூபிக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

எனவே இனிமேல் கிடைக்கும் வாய்ப்பில் ரோஹித் கண்டிப்பாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இன்னிங்ஸை ஆடியே தீர வேண்டும். அப்படியில்லாமல் மீண்டும் வாய்ப்புகளை வீணடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை மறந்துவிட வேண்டியதுதான்.