உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து நிற்கிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. 

உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒருசில இடங்களுக்கான தேர்வு மட்டுமே இனிமேல் செய்யப்பட உள்ளது. 4ம் வரிசை வீரருக்கான தேடல் இன்னும் முடிந்தபாடில்லை. ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய தொடரில் சிறப்பாக ஆடிய ராயுடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாதை அடுத்து கடைசி இரண்டு போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

கடைசி போட்டியில் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். ஆனால் அவர் வழக்கம்போலவே சொதப்பினார். ரிசர்வ் விக்கெட் கீப்பர் தேர்வாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் சொதப்பியதை அடுத்து அவர் அழைத்து செல்லப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல நான்காம் வரிசைக்கான வீரரும் உறுதி செய்யப்பட வேண்டும். 

இப்படியாக இன்னும் சில சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் டாஸ் போட்ட பின்னர் பேசிய கேப்டன் கோலி, இன்றைய போட்டியில் ஆடும் இந்திய அணி, நல்ல பலம் வாய்ந்த சீரான அணி என்று கருதுகிறேன். இந்த போட்டியில் ஆடும் அணிதான் கிட்டத்தட்ட உலக கோப்பையில் ஆடும் அணி என்றார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் ஆடிய இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, குல்தீப், பும்ரா. 

நேற்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. 

கோலியின் கூற்றுப்படி பார்த்தால், நேற்று ஆடிய அணியில் சில மாற்றங்கள் மட்டும் செய்யப்படும். உலக கோப்பையில் தோனி ஆடுவார் என்பதால் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இருக்கமாட்டார். அதேபோல ஹர்திக் பாண்டியா ஆடுவார் என்பதால் ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார். விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்க வாய்ப்புள்ளது. ஹர்திக் பாண்டியா 7ம் வரிசையில் இறங்குவார். குல்தீப் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் ஸ்பின் பவுலர்களாக இருப்பர். பிரைம் ஸ்பின்னர் குல்தீப்புடன் பார்ட் டைம் ஸ்பின்னர் கேதர் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 

கேப்டன் கோலி இவ்வாறு கூறியதை அடுத்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், இந்த அணி இந்தியாவின் சிறந்த 11 வீரர்களை கொண்ட அணி அல்ல என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய காம்பீர், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கருதுகிறேன். ஆனால் இந்த அணி, சிறந்த 11 வீரர்களை கொண்ட அணி என்று நான் கருதவில்லை. விராட் கோலி கிட்டத்தட்ட இந்த அணிதான் உலக கோப்பையில் ஆடப்போகிறது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த அணியில் பேட்டிங் டெப்த் கிடையாது. தோனி அணியில் இணைந்தாலும் கூட இந்த அணி சிறந்த அணியாக இருக்கும் என்று நினைக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.