ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்த 32 வயதான அமித் குமார், டெல்லி பாரத் நகர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் கொரோனாவால் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

திடீர் மூச்சுத்திணல், காய்ச்சலால் சிரமப்பட்ட அமித் குமாரை அட்மிட் செய்து சிகிச்சையளிக்காமல் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனை, தீப் சந்த் பந்து மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் அலைக்கழித்ததால், ஆர்.எம்.எல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அமித் குமார் உயிரிழந்தார். அவருக்கு செய்த பரிசோதனை முடிவு மறுநாளான கடந்த புதன் கிழமை வெளியானதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. 

ஏதாவது ஒரு மருத்துவமனையில் அமித் குமாரை அனுமதித்து சிகிச்சையளித்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் காவல்துறை உயரதிகாரிகளும் உதவவில்லை என்றும் சக காவலர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து, அமித் குமாரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால். டெல்லி காவல்துறையும், அமித் குமாரின் குடும்பத்திற்கான அனைத்து வசதிகளையும் காவல்துறை செய்துகொடுக்கும் என்று தெரிவித்தனர். 

கொரோனாவால் உயிரிழந்த டெல்லி காவலர் அமித் குமாருக்கு மனைவியும் 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அந்த குழந்தையை இனிமேல் தன் குழந்தையாக பாவித்து, அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் அவனது முழு படிப்பு செலவையும், கவுதம் கம்பீர் ஃபவுண்டேஷனே ஏற்கிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கம்பீர் பதிவிட்டுள்ள டுவீட்டில், டெல்லி அரசு நிர்வாகம் தோற்றுவிட்டது, சிஸ்டம் தோற்றுவிட்டது, ஒட்டுமொத்த டெல்லியும் அமித் விவகாரத்தில் தோற்றுவிட்டது. இறந்த அமித்தை நம்மால் திரும்ப பெற முடியாது. ஆனால் அவரது மகன், இனிமேல் என் மகன். அவனுக்கான படிப்பு செலவு முழுவதையும் கவுதம் கம்பீர் ஃபவுண்டேஷனே பார்த்துக்கொள்ளும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மிகவும் நேர்மையானவர் மட்டும் நல்ல மனது கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை அவர் கிரிக்கெட் ஆடிய காலத்திலிருந்து இன்று வரை களத்தில் மட்டுமல்லாமல், பொதுச்சமூகத்திலும் தொடர்ச்சியாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கம்பீர், பாஜகவில் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். டெல்லி கிழக்கு தொகுதி எம்பியாக உள்ள கம்பீர், இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். குறிப்பாக, நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்கள், துணை ராணுவ படையினரின் குழந்தைகளின் படிப்பு செலவுகளை கம்பீர் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.