இந்திய அணி 2019 உலக கோப்பைக்காக விராட்கோலி தலைமையில் 2 ஆண்டுகளாக மிகத்தீவிரமாக தயாரானது. ஆனால் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு, பேட்ஸ்மேன்களின் சொதப்பலே காரணம். குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்டிங் ஆர்டர் வலுவான, நிரந்தரமான பேட்டிங் ஆர்டராக இல்லாதது தான் முக்கியமான காரணம். 

உலக கோப்பை லீக் சுற்று முழுவதும் ரோஹித் சர்மா, விராட் கோலி, தவான், கேஎல் ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி எந்த சிக்கலையும் சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் ரோஹித், ராகுல், கோலி ஆகிய மூவருமே ஏமாற்றமளிக்க, அந்த நெருக்கடியை சமாளித்து வெற்றியை நோக்கி அழைத்துச்செல்ல வல்ல மிடில் ஆர்டர் இல்லாததால் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

யுவராஜ் சிங், 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓரங்கட்டப்பட்ட பின், 2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு, அப்போதிலிருந்தே நான்காம் வரிசை வீரரை தேடும்பணியில் தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் இறங்கியது. அந்த வரிசையில் நிறைய வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 

அவர்கள் அம்பாதி ராயுடுதான் ஓரளவிற்கு நம்பிக்கையளித்தார். அதற்கு காரணம், அவருக்கு மட்டும்தான் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 2018 ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர் என ராயுடு நான்காம் வரிசையில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதால், அவர் தான் உலக கோப்பைக்கான நான்காம் வரிசை வீரர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. அணி தேர்வாளர்கள், கேப்டன் கோலி ஆகியோரும் ராயுடு தான் நான்காம் வரிசை வீரர் என தெரிவித்தனர். 

ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு கழட்டிவிடப்பட்டு, உலக கோப்பைக்கான இந்திய அணியில் விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். அதற்கு, விஜய் சங்கர் ஆல்ரவுண்டர். எனவே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்யக்கூடிய முப்பரிமான வீரர் என்பதால், அவரை அணியில் எடுத்ததாக விளக்கமளிக்கப்பட்டது. உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே, ராயுடுவின் புறக்கணிப்பு பெரும் சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உள்ளானது.

இந்நிலையில், ராயுடுவின் புறக்கணிப்பு குறித்து அணி தேர்வாளர் ககன் கோடா, ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். 

ராயுடுவின் புறக்கணிப்பு குறித்து பேசிய ககன் கோடா, அம்பாதி ராயுடு அனுபவம் வாய்ந்த வீரர். உலக கோப்பையை கருத்தில்கொண்டுதான் அவருக்கு உலக கோப்பைக்கு முன் ஓராண்டு தொடர் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில், அவர் மந்தமாகிவிட்டதாக உணர்ந்தோம். அவரது உறுதியும் நம்பிக்கையும் குறைந்தது. அதனால் தான் அவரை எடுக்கவில்லை என்று ககன் கோடா தெரிவித்தார்.