பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் சிறந்த முன்னாள் பேட்ஸ்மேனான யூனிஸ் கானை, அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

யூனிஸ் கானும் வீரர்களுக்கு டிப்ஸ்களை கொடுத்துவருகிறார். யூனிஸ் கான் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப முதல் இன்னிங்ஸி ஷான் மசூத் சிறப்பாக ஆடி சதமடித்தார். பாபர் அசாம் அரைசதம் அடித்தார். ஷான் மசூத் 156 ரன்களையும் பாபர் அசாம் 69 ரன்களையும் விளாச, ஷதாப் கான் தன் பங்கிற்கு 46 ரன்கள் அடித்து கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் இவர்கள் மூவரை தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஷான் மசூத், பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 219 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இருந்தும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 169 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட்டானதால். 277 ரன்கள் என்ற எளிய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 107 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி 250--300 ரன்களை இரண்டாவது இன்னிங்ஸில் அடித்திருந்தால் ஜெயித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டு, 169 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்டது பாகிஸ்தான். 

277 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு இது எளிய இலக்கு. ஆனால் அந்த இலக்கை அவ்வளவு எளிதாக அடிக்கவிடவில்லை பாகிஸ்தான். 117 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் பவுலர்கள் வீழ்த்திவிட்டனர். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்த அந்த சூழலில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதையும் தவறவிட்ட பாகிஸ்தான், பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரையும் அடிக்கவிட்டனர். அந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெற்றியை தாரைவார்த்தனர். இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  

இந்நிலையில் இந்த போட்டியின் முடிவு குறித்து அஃப்ரிடி, முகமது யூசுஃப் ஆகிய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளனர். 

இதுகுறித்து அஃப்ரிடி பதிவிட்ட டுவீட்டில், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாராட்டுகள். பட்லரும் வோக்ஸும் அருமையாக பேட்டிங் ஆடினார்கள். பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை நழுவவிட்டது பாகிஸ்தான். இந்த மாதிரியான வெற்றி வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. ஆடுகளமும் பாகிஸ்தான் பவுலர்களுக்கு ஏற்றவிதத்தில் தான் இருந்தது என்று அஃப்ரிடி பதிவிட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவனான முகமது யூசுஃப், தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.