சிறந்த நிர்வாகத்திறமையும் தலைமைப் பண்புகளும் கொண்டவர் கங்குலி என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்திலேயே அவரது செயல்பாடுகளின் மூலம் அனைவருக்கும் தெரியும். எனவே பிசிசிஐயின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திறமைக்கு முன்னுரிமை அளித்து இந்திய கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவார் என்பதில் சந்தேகமில்லை. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இளம் வீரர்களை வளர்த்தெடுத்து, சிறப்பான அணியை உருவாக்கி, இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியதோடு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்தவர். 

கங்குலி ஒரு கேப்டனாகவும், வீரராகவும் இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்த உழைப்பையும் பங்களிப்பையும், பிசிசிஐயின் தலைவராகவும் அளிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவிப்பதுடன் கங்குலிக்கு தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர். 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், கங்குலியை தலைசிறந்த தலைவர் என புகழ்ந்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் வீரரான ரஷீத் லத்தீஃபும் கங்குலியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

கங்குலி குறித்து பேசிய ரஷீத், நான் கங்குலி விஷயத்தை மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசமாக பார்க்கிறேன். பல்வேறு தலைவர்களை பெங்காலில் இருந்து உருவாகியிருக்கிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன், சுதந்திர போராட்டத்தின் போது பெங்காலில் தான் நிறைய தலைவர்கள் இருந்தார்கள். அதே மண்ணில் இருந்து வந்தவர் தான் கங்குலியும். 

அவர் ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை நிர்வகித்த அனுபவம் கொண்டவர். எனவே பிசிசிஐயையும் சிறப்பாக நிர்வகிப்பார். அவருடைய முழுக்கவனமும் உள்நாட்டு கிரிக்கெட்டை மேம்படுத்துவதிலும் உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுமாகவும்தான் இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டிற்கும் முதல் தர கிரிக்கெட்டிற்கும் இடையேயான பொருளாதார வேறுபாட்டை ஈடுகட்ட நினைக்கிறார் கங்குலி என்று ரஷீத் தெரிவித்துள்ளார். 

சுபாஷ் சந்திர போஸ், மௌலானா அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்ட மிகச்சிறந்த தலைவர்கள் பலர் பெங்காலிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதை குறிப்பிட்டுத்தான் ரஷீத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.