சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர். 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி, அதிக ரன்கள், அதிக சதங்கள் என பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். 

இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15921 ரன்களையும் 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 49 சதங்களுடன் 18426 ரன்களையும் குவித்துள்ளார். 100 சர்வதேச சதங்களுடன் 34,357 ரன்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்னொரு வீரர் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். 

சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தாலும், அவர் கேப்டன்சியில் சோபிக்கவில்லை. அணியை திறம்பட வழிநடத்த முடியாமல், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மோசமான கேப்டன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். 

சச்சின் டெண்டுல்கரின் கேப்டன்சியில் இந்திய அணி 73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி வெறும் 23 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில், கேப்டனாக அவரது வெற்றி விகிதம் வெறும் 35.07. இதுதான் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கேப்டனின் மோசமான வெற்றி விகிதம். அதேபோல சச்சின் டெண்டுல்கரின் தலைமையில் இந்திய அணி ஆடிய 25 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. 

தனது பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பிய சச்சின் டெண்டுல்கருக்கு, கேப்டன்சி பொறுப்பு இடையூறாக இருந்தது. கேப்டன்சியை அவர் சுமையாக பார்த்தார். அதனால் கேப்டன்சி பொறுப்பில் இருக்க விரும்பாத அதிலிருந்து ஒதுங்கியதாக, அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக இருந்த சந்து போர்தே தெரிவித்துள்ளார். 

சச்சினுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற சவுரவ் கங்குலி தான் இந்திய அணியை இளம் வீரர்களை அடையாளம் கண்டு, சரியான அணி காம்பினேஷனை தேர்வு செய்து அணியை மறுகட்டமைப்பு செய்தார். 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து ஸ்போர்ட்ஸ்கீடாவில் சமூக வலைதள லைவ் உரையாடலில் பேசிய சந்து போர்தே, உங்களுக்கு நினைவிருந்தால் தெரியும்.. சச்சின் டெண்டுல்கரை 1999ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு கேப்டனாக அனுப்பிவைத்தோம். அங்கிருந்து திரும்பி வந்ததும், என்னால் கேப்டனாக தொடர முடியாது என்று சச்சின் தெரிவித்துவிட்டார். எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லி கேப்டன்சியிலிருந்து ஒதுங்குவதாக சொன்னார். ஆனால் நான் தான் அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சித்தேன். புதிய கேப்டனின் தலைமையில் அடுத்த தலைமுறை இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, சச்சினை கேப்டனாக தொடரவைக்க முயற்சி செய்தேன்.

ஆனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சச்சின், கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். என்னுடன் இருந்த சக தேர்வாளர்கள், சச்சினை ஏன் வற்புறுத்துகிறீர்கள் என்று கேட்டனர். சச்சின் கேப்டன் பொறுப்பில் நீடிக்க விரும்பாததையடுத்து, கங்குலி கேப்டனாக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார். 

அந்த 1999 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 0-3 என ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது. அந்த தொடரில் சச்சின் தான் அதிக ரன்களை அடித்திருந்தார். ஆனாலும் அவரது ஆட்டம் அவருக்கு திருப்தியளிக்கவில்லை.