Asianet News TamilAsianet News Tamil

Kohli vs Ganguly: கோலி பேசியது எனக்கு வியப்பா இருக்கு; சீக்கிரம் இந்த பிரச்னையை முடிங்க - முன்னாள் தேர்வாளர்

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து அவர் பேசியது வியப்பாக இருந்ததாகவும், அணி தேர்வில் பிசிசிஐ தலையிட முடியாது என்றும் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 

Former India selector sarandeep singh speaks on Virat Kohli press conference
Author
Chennai, First Published Dec 16, 2021, 9:44 PM IST

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில், தெளிவு கிடைக்காமல் சர்ச்சை நீடிக்கிறது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் பலருக்கு அதிருப்தியளித்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள கோலியை, பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது பலரது கருத்து.

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் விராட் கோலி அதை ஏற்க மறுத்து டி20 கேப்டன்சியிலிருந்து விலகியதால், வெள்ளைப்பந்து அணிகளுக்கு இருவேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால் தான் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனது கேப்டன்சி நீக்கம், ரோஹித்துடனான உறவு என தன்னை சுற்றி பிண்ணப்பட்ட அனைத்து சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்தார் விராட் கோலி.

அப்போது கங்குலி கூறிய கருத்து மற்றும் தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து பேசிய விராட் கோலி, பிசிசிஐ என்னை டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை. டி20 கேப்டன்சியிலிருந்து விலகும் என் முடிவை தெரிவித்தவுடன் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான், என்னை கேப்டன்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார். நான் சரி என்றேன். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன்பாக என்னிடம் கேப்டன்சி விஷயம் குறித்து தேர்வாளர்கள் பேசவேயில்லை. பிசிசிஐயும் என்னை டி20 கேப்டன்சியில் நீடிக்குமாறு அறிவுறுத்தவில்லை என்றார் கோலி. 

கங்குலி கூறிய கருத்துக்கு முற்றிலும் முரணாக கோலி பேசியதால் குழப்பம் ஏற்பட்டது. இது பல்வேறு விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. இதுதொடர்பாக கங்குலி தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணி முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங், கேப்டனை நியமிப்பது, அணி தேர்வு ஆகியவை தேர்வாளர்களின் பணி. அதில் பிசிசிஐ தலையிடமுடியாது. அப்படியிருக்கையில், விராட் கோலி பேசியது எனக்கு வியப்பாக இருந்தது. என்னை பொறுத்தமட்டில், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு 2 கேப்டன்கள் இருக்கமுடியாது. அது சரிதான். ஆனால் இந்த விவகாரம் இன்னும் ப்ரொஃபஷனலாக கையாளப்பட்டிருக்க வேண்டும். விராட் கோலியிடம் முன்கூட்டியே இதுகுறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இந்த பிரச்னை விரைவில் முடிவுக்கு வருவது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது என்று சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios