ரஹானே, ஹனுமா விஹாரி என மிடில் ஆர்டர் வலுவாக இருந்ததால் ரோஹித்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அதேநேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் இறங்கி ரோஹித் சர்மா பெரிதாக சோபிக்கவும் இல்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றிருந்தும் கூட ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. 

ரோஹித் சர்மாவை ஆட வைத்திருக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கினால் அவர் சேவாக்கை போல ஜொலிப்பார் என முன்னாள் ஜாம்பவான்களும் வலியுறுத்தினர். ஒருநாள் கிரிக்கெட்டிலும் மிடில் ஆர்டரில் சொதப்பிய ரோஹித் சர்மா, தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர் தான், அவரது கெரியரே தலைகீழாக திரும்பியது. 

அதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக இறக்கிவிட்டால் அவர் பெரிய லெவலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக இறங்கிவருகிறார் ரோஹித் சர்மா. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, அந்த இன்னிங்ஸில் 176 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களையும் குவித்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, அடுத்த சில தொடர்களுக்கு, அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் ரோஹித் சர்மா. இரண்டாவது போட்டியில் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கண்ட பலரும் அவரை அதற்குள்ளாக சேவாக்குடன் ஒப்பிட தொடங்கிவிட்டனர். ரோஹித் திறமையான வீரர்தான் என்றாலும் தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் நல்ல ஸ்கோர் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றிகரமான டெஸ்ட் வீரராக அவரால் ஜொலிக்க முடியும். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவை டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கியது நல்ல முடிவு என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈஎஸ்பிஎன் க்ரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு இயன் சேப்பல் எழுதியுள்ள கட்டுரையில், ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக இறங்கும் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்தபடியாக அபாயகரமான இந்திய வீரராக தன்னை உருவாக்கி நிலைநிறுத்தி கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக இறக்கப்பட்டிருக்கும் ரோஹித், கோலிக்கு முன்னதாகவே பேட்டிங் ஆடுவது, ரோஹித்தின் டெஸ்ட் கெரியரை புதுப்பித்துக்கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு. 

ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஜொலித்துவிட்டால், அது இந்திய அணிக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே ரொம்ப நல்லது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு வாணவேடிக்கை நிகழ்த்தி எண்டெர்டெய்ன் செய்துவிடுவார் என்று இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.