புனேவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் மயன்க் அகர்வால் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சதமடித்தனர். புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தில் ரஹானே அரைசதம் கடந்தார். கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார். அரைசதம் அடித்த ரஹானே ஆட்டமிழந்த பிறகு, கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இன்றைய ஆட்டத்தின் டி பிரேக்கிற்கு பின் தென்னாப்பிரிக்காவை பேட்டிங் ஆட விட வேண்டும் என்பதால், விரைவில் ரன் சேர்க்க வேண்டும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டு டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இன்றைய ஆட்டம் தொடங்கி 3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், அம்பயர் நைஜல் லாங், இரு அணி கேப்டன்களையும் அழைத்து உணவு இடைவேளை வரையிலான முதல் செசனில் டி.ஆர்.எஸ் கேட்கமுடியாது என்ற விஷயத்தை தெரிவித்தார். டெக்னிக்கல் பிரச்னையா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவில்லை. ஆனால் டி.ஆர்.எஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இப்படி நடப்பது இதுதான் முதன்முறை. ஆனால் அம்பயர் தெரிவித்ததுபோன்று இல்லாமல், அதன்பின்னர் கொஞ்ச நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி, ரஹானேவின் விக்கெட்டுக்காக ரிவியூ கேட்டது.

அதற்குள்ளாக அந்த பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கலாம். அதனால்தான் தென்னாப்பிரிக்க அணி ரிவியூ கேட்டது. ஆனால் அம்பயர் என்ன காரணத்தினால் முதல் செசனில் டி.ஆர்.எஸ் கேட்கமுடியாது என கூறினார் என்பது உறுதியாக தெரியவில்லை.