கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. ஸ்ரீசாந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்துவருகிறார். 

ஸ்ரீசாந்த் நேற்று இரவு வீட்டில் இல்லாத நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் தரைத்தளத்தில் தீப்பிடித்துள்ளது. ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தைகள் முதல் தளத்தில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார்கள். ஸ்ரீசாந்தின் வீட்டிலிருந்து புகை வந்ததை கண்ட, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், கதவின் கண்ணாடியை உடைத்து ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பத்திரமாக மீட்டதுடன், தீயையும் விரைவாக செயல்பட்டு அணைத்துள்ளனர். தீயணைப்பு துறையினரின் விரைவான செயல்பாட்டால், ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எந்தவிதமான காயமும் இல்லை. 

சர்ச்சைகளுக்கு பெயர்போன ஸ்ரீசாந்த், சூதாட்டப் புகாரில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவரது வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாக குறைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிசிசிஐ ஒழுங்கு நெறிமுறை அதிகாரி ஜெயின். இதையடுத்து ஸ்ரீசாந்தின் தடைக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியுடன் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.