உலக கோப்பை தொடரில் வார்னர் மந்தமாக ஆடிவருவதாக ஒரு விமர்சனம் உள்ளது. அதற்கான காரணத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் செம ஃபார்மில் சிறப்பாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவருகின்றனர். இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

உலக கோப்பைக்கு முன்னதாக சொதப்பிவந்த ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையில் அபாரமாக ஆடிவருகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை முடிந்து ஸ்மித் மற்றும் வார்னர் உலக கோப்பை தொடரில் அணியில் இணைந்தனர். அவர்களின் வருகை ஆஸ்திரேலிய அணிக்கு உத்வேகத்தை அதிகப்படுத்தியது. 

இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை ஏமாற்றாத வகையில் இருவரும் நன்றாக ஆடிவருகின்றனர். குறிப்பாக வார்னர் அபாரமாக ஆடி ரன்களை குவித்து வருகிறார். இதுவரை 496 ரன்களை குவித்துள்ள வார்னர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 496 ரன்களுடன் ஃபின்ச்சுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். ஃபின்ச் 500 அடித்து முதலிடத்தில் உள்ளார். ஃபின்ச்சை விட வெறும் 4 ரன்கள் தான் வார்னர் குறைவு. 

வார்னர் ரன்களை குவித்துவந்தாலும் இந்த உலக கோப்பை தொடரில் வார்னர் ஆடிவரும் ஆட்டம், அவரது இயல்பான ஆட்டம் கிடையாது. வழக்கமாக களமிறங்கியது முதலே அடித்து ஆடக்கூடிய வார்னர், இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலுமே நிதானமாகவே தொடங்கி ஸ்லோ இன்னிங்ஸே ஆடினார். இந்தியாவிடம் 84 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்கள் மட்டுமே அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக கூட 111 பந்துகளில் 107 ரன்கள் அடித்தார். அதை பெரிய இன்னிங்ஸாகவும் மாற்றவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட 61 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். 

வழக்கமாக அதிரடியாக ஆடியே அதிகமாக பார்க்கப்பட்ட வார்னரின் ஸ்லோ இன்னிங்ஸ்களை கண்ட பலர், அவரது ஸ்லோ இன்னிங்ஸை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின்னர் வார்னரின் ஸ்லோ இன்னிங்ஸ் குறித்து பேசிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், தற்போதைய வார்னர் பழைய வார்னராக இல்லை. அவர் மந்தமாக ஆடிவருகிறார் என பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் ஆடிய ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. அதனால் அந்த ஆடுகளத்திற்கும் கண்டிஷனுக்கும் மதிப்பளித்து வார்னர் சிறப்பாக ஆடிவருகிறார். அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸ், அவரது சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. அவர் சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடி அணிக்காக நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்கிறார் என்று ஃபின்ச் தெரிவித்தார்.