இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியை பார்க்க வந்த பார்வையாளர்களில் இருதரப்பினர் வெறித்தனமாக அடித்துக்கொண்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து போலீஸ் வந்து விலக்கிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 211 ரன்களை குவித்தும், அதை கட்டுப்படுத்த முடியாமல் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதிகபட்சமாக அவர் 48 பந்தில் 76 ரன்களை குவித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 31 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 211 ரன்கள் அடித்தது இந்திய அணி.
212 ரன்கள் என்பது கடினமான இலக்குதான் என்றாலும், டேவிட் மில்லர்(64) மற்றும் வாண்டர் டசன்(75) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
இந்த போட்டியை டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நேரில் பார்த்த ரசிகர்கள் சிலர் கடுமையாக சண்டை போட்டுக்கொண்டனர். ஒரு நபரை 4 பேர் சேர்ந்து அடித்தனர். அந்த ஒரு நபர் அவர்கள் நால்வரையும் அடித்தார். இந்த இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. வெறித்தனமாக அடித்துக்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு போலீஸ் வந்து விலக்கிவிட்டார். இந்த சண்டையை மற்றொரு பார்வையாளர் வீடியோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
