உலக கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

உலக கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை தோல்வியையே சந்தித்திராத இரு அணிகளும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நியூசிலாந்து அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி நாளை நாட்டிங்காமில் நடக்க உள்ளது. வலுவான இந்திய அணியை வீழ்த்தும் வியூகத்தை தெரிவித்துள்ளார் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஃபெர்குசன். 

இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பேசிய ஃபெர்குசன், இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். இந்திய அணிக்கு எதிரான போட்டியில், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முனைவோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அதன்மூலம் நெருக்கடியை கொடுக்க வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்றால், ரன்கள் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி அதிகமான டாட் பந்துகளை வீசி நெருக்கடியை ஏற்படுத்துவோம். இந்த உலக கோப்பை தொடரில் வலுவான அணியான திகழும் இந்திய அணியை இங்கிலாந்தில் எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளோம் என்று ஃபெர்குசன் தெரிவித்துள்ளார்.