இந்திய அணியின் தேர்வாளர்கள் தகுதியில்லாதவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார் ஃபரோக் எஞ்சினியர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், தேர்வாளர்கள் எதனடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்? இப்போது தேர்வாளர்களாக இருப்பவர்கள் வெறும் 10-12 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியவர்கள். தேர்வாளர்களில் ஒருவர்.. அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை. உலக கோப்பையில் ஒரு போட்டியில் இந்திய அணியின் ப்ளேசரை போட்டுக்கொண்டு அனுஷ்கா சர்மாவிற்கு டீ எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தார். அவரெல்லாம் ஒரு தேர்வாளரா என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்த விவகாரத்தில் தனது பெயரை இழுத்துவிட்டதால் செம கடுப்பான அனுஷ்கா சர்மா, இதுவரை அடக்கிவைத்திருந்த ஆதங்கங்கள் அனைத்தையும் கொட்டித்தீர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், இதுவரை என் தொடர்பான வதந்திகள் மற்றும் கருத்துகள் அனைத்திற்கும் அமைதியாகவே இருந்து வந்துள்ளேன். ஆனால் எனது அமைதியையே எனது பலவீனமாக நினைக்கிறார்கள். இதுவரை என்னை பற்றி பேசப்பட்ட கருத்துகளை விட, இது என்னை அதிகமாக பாதித்திருக்கிறது. எனவே அதனால்தான் நான் இப்போது பேசுகிறேன். 

உலக கோப்பையில் ஒரேயொரு போட்டியை மட்டுமே நான் நேரில் சென்று பார்த்தேன். அதுவும் குடும்ப உறுப்பினர்களின் பாக்ஸில்தான் நான் இருந்தேன். தேர்வாளர்களின் பாக்ஸில் அல்ல. எனவே இனிமேல் என் பெயருக்கோ அல்லது எனது கணவரின் பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச விரும்புபவர்கள், ஆதாரத்துடன் பேசுங்கள். உங்கள் கருத்து பரபரப்பாவதற்கு எனது பெயரை இழுத்துவிடாதீர்கள் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். 

இதைக்கண்ட ஃபரோக் எஞ்சினியர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தேர்வாளர் ஒருவர் அனுஷ்கா சர்மாவிற்கு டீ கொடுத்த சம்பவம் உண்மையில் நடந்ததுதான். ஆனால் அனுஷ்காவை விமர்சிப்பதற்காக நான் அதை சொல்லவில்லை. அவர் மிகவும் அழகான நல்ல பெண் மட்டுமல்லாது மிகச்சிறந்த மனிதர். அவரை குறிவைத்து நான் அந்த கருத்தை சொல்லவில்லை. எனது கருத்து அனுஷ்கா சர்மாவை பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்வாளர்கள் சரியில்லை என்பதற்காகவே நான் அந்த கருத்தை சொன்னேனே தவிர அனுஷ்காவை காயப்படுத்துவதற்கல்ல என்று ஃபரோக் கூறியுள்ளார்.