பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில், லாகூர் கலந்தர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஃபகர் ஜமானுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், லாகூர் கலந்தர்ஸ் அணியின் பேட்ஸ்மேனுமான ஃபகர் ஜமான், பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கியுள்ளார். இதற்காக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது இந்த சர்ச்சை எழுந்தது.
PSL சர்ச்சை
ESPNCricinfo தகவலின்படி, போட்டி நடுவர் ரோஷன் மகாநாமாவின் விசாரணைக்குப் பிறகு இந்த தடை அறிவிக்கப்பட்டது. ஃபகர் ஜமான், PSL நடத்தை விதிகளில் உள்ள 41.3-வது பிரிவை மீறி, பந்தின் தன்மையை மாற்றியதாக நடுவர் தனது விசாரணையில் உறுதி செய்தார். ஆரம்பத்தில் ஃபகர் ஜமான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததால், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பந்தை சேதப்படுத்திய ஃபகர் ஜமான்
PSL நடத்தை விதிகளின்படி, லெவல் 3 குற்றத்தில் முதல் முறையாக சிக்கும் ஒரு வீரருக்கு குறைந்தபட்சம் ஒரு போட்டி அல்லது அதிகபட்சம் இரண்டு போட்டிகள் வரை தடை விதிக்கப்படும். கராச்சி கிங்ஸ் அணியின் சேஸிங்கின்போது, கடைசி ஓவர் தொடங்குவதற்கு முன்பு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் ஃபகர் ஜமான் இடையே கைமாறிய பந்தை, ஹாரிஸ் ராஃபிடம் இருந்து கள நடுவர் பைசல் அஃப்ரிடி வாங்கிப் பார்த்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
அதன்பிறகு, மற்றொரு நடுவரான ஷர்புத்துல்லாவுடன் பைசல் நீண்ட நேரம் விவாதித்தார். இறுதியில், பந்து சேதப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்து, மாற்றுப் பந்தை கொண்டுவர முடிவு செய்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "போட்டி நடுவர் ரோஷன் மகாநாமா, அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து, ஃபகர் ஜமானுக்கு நேரில் விளக்கம் அளிக்கும் வாய்ப்பையும் வழங்கிய பின்னரே இந்த முடிவை எடுத்தார். இந்த விசாரணையின்போது, லாகூர் கலந்தர்ஸ் கேப்டன் ஷஹீன் ஷா அஃப்ரிடி, அணி இயக்குநர் சமீம் ராணா மற்றும் அணி மேலாளர் ஃபரூக் அன்வர் ஆகியோரும் உடனிருந்தனர்" என்று ESPNCricinfo குறிப்பிட்டுள்ளது.
2 போட்டிகளில் விளையாட தடை
PSL விதிகளின்படி, ரோஷன் மகாநாமாவிடமிருந்து எழுத்துப்பூர்வ தீர்ப்பைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள், ஃபகர் ஜமான் இந்த முடிவை எதிர்த்து லீக்கின் தொழில்நுட்பக் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். இந்தத் தடையால், ஃபகர் ஜமான் ஏப்ரல் 3-ம் தேதி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 9-ம் தேதி இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிராகவும் நடக்கவிருக்கும் போட்டிகளில் விளையாடமாட்டார். லாகூர் கலந்தர்ஸ் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


